ஹாசன்: ஹாசன், சென்னராயப்பட்டணா அருகே ஹிரேசாவே கிராமம் வழியாக செல்லும், தேசிய நெடுஞ்சாலையில் இரவில் வாகன ஓட்டிகளை மிரட்டி, ஒரு கும்பல் நகை, பணம், மொபைல் போன்களை கொள்ளை அடித்தது. இந்த கும்பலை கைது செய்ய, சென்னராயப்பட்டணா இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது.கொள்ளை கும்பல் ஹிரேசாவே அருகே, புக்கனபெட்டா கிராமத்தில் இருப்பதாக, இன்ஸ்பெக்டர் ரகுபதிக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு இன்ஸ்பெக்டர் ரகுபதி, எஸ்.ஐ., பரத் ரெட்டி தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் கொள்ளை கும்பலை சேர்ந்த மூன்று பேர் தப்பினர். ஒருவர் மட்டும் சிக்கி கொண்டார். அவரை போலீஸ்காரர் புட்டராஜ் பிடித்து வைத்து இருந்தார்.திடீரென கொள்ளையன், புட்டராஜை பிடித்து தள்ளியதுடன், கீழே கிடந்த அரிவாளை எடுத்து தாக்கினார். இதில் புட்டராஜ் கையில் வெட்டு விழுந்தது. அங்கிருந்து கொள்ளையன் தப்பி ஓடினார்.அதிர்ச்சி அடைந்த எஸ்.ஐ., பரத் ரெட்டி, துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு, சரண் அடையும் எச்சரித்தார். கொள்ளையன் கேட்கவில்லை. இதனால் பரத் ரெட்டி சுட்டதில், கொள்ளையன் வலது காலில் குண்டு துளைத்தது. சுருண்டு விழுந்தவர் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் அவர் பெயர் சதீஷ், 36 என்பது தெரிந்தது. சதீஷும், காயம் அடைந்த போலீஸ்காரர் புட்டராஜும் சென்னராயப்பட்டணா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பியோட்டம்
மாண்டியா மலவள்ளி ஹலகூர் அருகே உள்ள, தேவரஹள்ளி கேட் கிராமத்தின் காந்தராஜ், 35. கடந்த 6ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். ஹலகூர் போலீசாரின் விசாரணையில், முன்விரோதத்தில் ரவுடியான முத்துராஜ், 28 என்பவர், காந்தராஜை கொலை செய்தது தெரிந்தது. அவரை ஹலகூர் போலீசார் தேடினர். நேற்று காலை மாண்டியாவில் இருந்து மலவள்ளி நோக்கி, பைக்கில் முத்துராஜ் சென்றார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஹலகூர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், போலீஸ்காரர் சித்தராஜ் ஆகியோர், ஹலகூர் அருகே ஹனியம்பாடி கிராமத்தில், முத்துராஜை பிடிக்க நின்றனர். இன்ஸ்பெக்டர், போலீஸ்காரரை பார்த்து முத்துராஜ் பைக்கை திருப்பி விவசாய நிலத்திற்குள் சென்றார். பைக்கை துரத்தி கொண்டு இன்ஸ்பெக்டரும், போலீஸ்காரரும் ஓடினர்.பின்னால் திரும்பி பார்த்த படி பைக்கை ஓட்டியதால், கட்டுப்பாட்டை இழந்து பைக் கவிழ்ந்தது. பைக்கில் இருந்து விழுந்த முத்துராஜை, போலீஸ்காரர் சித்தராஜ் பிடித்தார். அப்போது பைக் சீட்டின் அடியில் இருந்த கத்தியை எடுத்து, சித்தராஜின் வலது கையில், முத்துராஜ் வெட்டினார்.அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், துப்பாக்கியை எடுத்து முத்துராஜின் வலது காலில் சுட்டார். சுருண்டு விழுந்தவர் கைது செய்யப்பட்டார்.முத்துராஜ், சித்தராஜை மாண்டியா மிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.