உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்சிக்காக பணியாற்றாதவரை தூக்கி எறியுங்கள்! மத்திய அமைச்சர் சோமண்ணா வலியுறுத்தல்

கட்சிக்காக பணியாற்றாதவரை தூக்கி எறியுங்கள்! மத்திய அமைச்சர் சோமண்ணா வலியுறுத்தல்

பெங்களூரு: ''இனியாவது கட்சிக்காக பணியாற்றுவோரை அடையாளம் காணுங்கள். கட்சிக்கு துரோகம் செய்தவர்களை, தயவு தாட்சண்யம் இன்றி துாக்கி எறியுங்கள்,'' என, மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சோமண்ணா, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு பரிந்துரைத்தார்.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, கர்நாடக பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு, பெங்களூரின் அரண்மனை மைதானத்தில், நேற்று பாராட்டு விழா நடந்தது.துமகூரு எம்.பி.,யும், மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சருமான சோமண்ணா பேசியதாவது:கட்சிக்காக பணியாற்றுவோரை, அடையாளம் காண வேண்டும். பணியாற்றாமல், தலைவர்களின் பின்னால் சுற்றுவோரை தயவு தாட்சண்யம் இன்றி, கட்சியில் இருந்து துாக்கி எறியுங்கள். இவர்கள் இருந்தாலும் ஒன்றுதான்; இல்லாவிட்டாலும் ஒன்றுதான். கடந்த 30 ஆண்டுகளாக, தாவணகெரே பா.ஜ.,வின் பாதுகாப்பு கோட்டையாக இருந்தது. இங்கு நாங்கள் சில ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றோம். இதற்கு யார் காரணம் என்பது முக்கியம் அல்ல. நம் தோல்வியை பற்றி, தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு கோட்டை

கட்சிக்கு எதிராக நடந்து கொண்டது யார் என்பதை, மாநில தலைவர் ஆய்வு செய்ய வேண்டும். யாரோ செய்த தவறுக்கு, மற்றவரை குறை கூறாதீர்கள். துமகூரில் சோமண்ணா தோற்பார் என, பலரும் கூறினர். ஆனால் நான் மனம் தளராமல், இரண்டு கட்சிகளின் தலைவர்களுடன் சேர்ந்து, பிரசாரம் செய்தேன்.என் வெற்றியில் பா.ஜ.,வை போன்றே, ம.ஜ.த.,வின் பங்களிப்பும் உள்ளது. சட்டசபை தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் தோற்ற என்னை, லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வைத்தனர். எனக்கு சக்தியூட்டினர்.இவ்வாறு அவர் பேசினார்.

மீண்டும் நிரூபணம்

மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேசியதாவது:கர்நாடகா, பா.ஜ.,வின் பாதுகாப்பு கோட்டை என்பது, மீண்டும் நிருபணமாகியுள்ளது. பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு, மக்களின் ஆசி கிடைத்துள்ளது. மாநிலத்தில் கூட்டணி சார்பில் 19 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர். அனைத்து தொண்டர்களுக்கும் நன்றி.கூட்டணி கட்சிகளை பற்றி, காங்கிரஸ் அவப்பிரசாரம் செய்தும், மாநில மக்கள் நமக்கு ஆதரவளித்துள்ளனர். புதிய எம்.பி.,க்களுக்கு வாழ்த்துகள். இதற்கு முன்பு ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், இம்முறை ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம்.ஆனால் 145 சட்டசபை தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்தன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ள தொகுதிகளிலும், கூட்டணி வேட்பாளர்களுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன.காங்கிரசின் மோசமான ஆட்சியால், அக்கட்சி பின்னடைவை சந்தித்தது. அடுத்த நான்கு ஆண்டுகள், இந்த ஆட்சியை எதிர்த்து நாம் போராட வேண்டும்.காங்கிரஸ் அரசும், முதல்வரும் தங்கள் தோல்வியை மறைக்க, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கின்றனர். மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் நின்றுள்ளன. இதே காரணத்தால், காங்கிரஸ் நாடகவுடா, ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.வருவாயை அதிகரிக்க, விலையை உயர்த்துகின்றனர். வறட்சியால் விவசாயிகள் கஷ்டத்தில் உள்ளனர். மத்திய அரசு 3,500 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியது. ஆனால் மாநில அரசு விவசாயிகளை பொருட்படுத்தவில்லை.சொத்து வரி, மின் கட்டணம், பெட்ரோல், டீசல் வரி, பத்திர பதிவு கட்டணம், மோட்டார் வாகன வரியை உயர்த்தியுள்ளனர். இது மக்களுக்கு எதிரான, விவசாயிகளுக்கு எதிரான அரசு. வரும் நாட்களில் மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல் நடக்கவுள்ளது. இது தொண்டர்களுக்கு சக்தியூட்டும் தேர்தலாகும். பொறுப்புடன் தேர்தலுக்கு தயாராக வேண்டும். சட்டசபை கூட்டத்திலும், பா.ஜ., - ம.ஜ.த., ஒற்றுமையாக இருந்து, காங்கிரசின் திமிரை அடக்க வேண்டும். சட்ட சபை கூட்டம் முடிந்த பின், மாவட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்வோம். பிரதமர் மோடி, கர்நாடகாவுக்கு ஐந்து மத்திய அமைச்சர் இடங்களை அளித்துள்ளார். மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உதவியுடன், மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் செய்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.

உள்ளாட்சி தேர்தல்கள்

முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசியதாவது:காங்கிரஸ் என்றால், பொய்யான வாக்குறுதி, ஊழல், மோசமான ஆட்சி, வளர்ச்சி பூஜ்யம் என்பது மக்களுக்கு புரிந்துள்ளது. விரைவில் பெங்களூரு மாநகராட்சி, மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து தேர்தல் நடக்கவுள்ளது. ம.ஜ.த.,வுடன் இணைந்து செயல்பட்டு, அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். நம் சக்தியை காண்பிக்க வேண்டும். தொண்டர்களின் உழைப்பால், இத்தனை எம்.பி.,க்கள் வெற்றி பெற்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியால், மாநிலத்தில் அமோக வெற்றி கிடைத்தது. 20 தொகுதிகளில் வெற்றி பெறுவதாக காங்கிரஸ் கூறியது. ஆனால் இந்த கட்சியை, மக்கள் குப்பையில் போட்டுள்ளனர். அவர்களுக்கு எங்கள் நன்றி. பெட்ரோல், டீசல் விலை உயர்த்திய காங்கிரசுக்கு, இப்போது கேடுகாலம் வந்துள்ளது.- ஆர்.அசோக், எதிர்கட்சித் தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை