உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சனிக்கிழமை மட்டும் கிடைக்கும் துாமரொட்டு

சனிக்கிழமை மட்டும் கிடைக்கும் துாமரொட்டு

இனிப்பு என்றால், யாருக்குத்தான் பிடிக்காது. இனிப்பு என்ற பேரை கேட்டாலே நாக்கில் எச்சில் ஊறும். இந்த காரணத்தால் எத்தனை ஆண்டுகளானாலும், இனிப்பு கடைகளுக்கு மக்களிடையே மவுசு குறைவதில்லை.சிக்கபல்லாபூர் நகராட்சி அலுவலகம் முன், 'மஞ்சுநாத் ஸ்வீட் ஸ்டால்' உள்ளது. இது மிகவும் பாரம்பரியமானது. நுாற்றாண்டு வரலாறு கொண்டது. இந்த கடையில் விற்கப்படும், 'துாமரொட்டு' என்ற இனிப்பு, மிகவும் பேமஸ். இதன் சுவைக்கு மயங்காதவர்களே இல்லை. இதை வாயில் போட்டால், ஆஹா என்ன ருசி என்ற எண்ணம் தோன்றாமல் இருக்காது.

சனிக்கிழமை

துாமரொட்டு இனிப்பு தினமும் கிடைக்காது. வாரந்தோறும் சனிக்கிழமை மட்டுமே கிடைக்கும். 1922ல் வெங்கசாலய்யா என்பவர், மஞ்சுநாத் ஸ்வீட் ஸ்டாலை துவக்கினார். அதன்பின் அவரது மகன் கோபால், கடையை நடத்தினார். தற்போது கோபாலின் மகன் பிரகாஷும், இவரது சகோதரரின் மகனும் கடையை நடத்துகின்றனர்.கடையை ஆரம்பித்த வெங்கடாசலா, முதலில் மைசூரு பாக் மற்றும் துாமரொட்டு இனிப்பை மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வந்தார். தற்போது நெய் அவல், ஓமப்பொடி, பாதுஷா, அல்வா உட்பட பல்வேறு இனிப்புகள் விற்கப்படுகின்றன. கடையின் சிறப்பே மைசூரு பாக்கும், துாமரொட்டும்தான். இந்த இரண்டு இனிப்புகளுக்காகவே தொலைவில் இருந்தும், இவரது கடையை தேடி வந்தனர்.

மாவட்டங்கள்

சமீபத்தில் சமூக வலைதளங்களில், கடையை பற்றிய வீடியோக்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. வெளி மாவட்டங்களிலும் இருந்து கடைக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர்.கடை உரிமையாளர் பிரகாஷ் கூறியதாவது:ஆரம்பத்தில் இருந்தே, துாமரொட்டு இனிப்புக்காகவே எங்கள் கடையை தேடி வந்தனர். இப்போது அவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. துாமரொட்டுவை தயாரிக்க அதிக நேரம் பிடிக்கும். இதை செய்தால் மற்ற இனிப்புகளை செய்ய முடியாது. எனவே சனிக்கிழமை மட்டும் இந்த இனிப்பை தயாரிக்கிறோம்.பூசணிக்காய், கோவா, சர்க்கரை, நெய், திராட்சை, முந்திரி என, பல்வேறு பொருட்களை வைத்து இந்த இனிப்பு தயாரிக்கப்படுகிறது. இதற்கு முன் உள்ளுர் மக்கள் மற்றும் இவர்களின் உறவினர்களுக்கு மட்டுமே, இந்த இனிப்பை பற்றி தெரிந்திருந்தது. இப்போது சமூக வலைதளம் மூலமாக, பலருக்கும் தெரிந்து கடையை தேடி வந்து வாங்குகின்றனர்.நாங்கள் இனிப்புகளை, காஸ் அடுப்பில் தயாரிப்பது இல்லை. விறகு அடுப்பில் தயாரிக்கிறோம். வெளிமாநிலங்களில் இருந்தும் எங்கள் கடைக்கு வந்து, மைசூரு பாக், துாமரொட்டு வாங்குகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு தரமான, சுவையான இனிப்பு கொடுத்தால், எங்கிருந்தாலும் தேடி வந்து வாங்குவர் என்பதற்கு, எங்கள் கடையே சிறந்த உதாரணம்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை