துாங்கும் வசதியுடைய வந்தே பாரத் ரயில் ரெடி! :இந்தாண்டு இறுதிக்குள் இயக்கப்படும்
பெங்களூரு: சொகுசு வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் துாங்கும் வசதி கொண்ட ரயில் பெட்டிகளை, பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல்., எனப்படும் மத்திய அரசின் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். இந்தாண்டு இறுதிக்குள் இந்த ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.நாடு முழுதும் 100 நகரங்களை இணைக்கும் வகையில் அதிவிரைவு வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன. இதில் சேர் கார், எக்சிகியூடிவ் கார் என அமரும் வசதியிலான இரண்டு வகை இருக்கைகள் மட்டுமே உள்ளன. தற்போது இவை, 400 கி.மீ., முதல் 800 கி.மீ., துாரம் உடைய நகரங்களுக்கு இடையே பகல் நேரத்தில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இரவில் பயணித்து, காலையில் ஊருக்கு சென்றடையும் வகையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதை பரிசீலித்த ரயில்வே அமைச்சகம், கடந்த ஆண்டு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணியில் இறங்கியது.இந்த பணி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல்., நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனம், வந்தே பாரத் ரயிலின் முதல் ஸ்லீப்பர் பெட்டிகளை தயாரித்துள்ளது. அந்த பெட்டிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார்.ஆய்வுக்கு பின், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:புதிய ரயிலை வடிவமைப்பது மிகவும் சிக்கலான வேலை. வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளில் பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இது நடுத்தர வர்க்கத்தினருக்கான ரயிலாக இருக்கும். கட்டணங்கள் ராஜ்தானி எக்ஸ்பிரசுக்கு இணையாக இருக்கும். தற்போது, வந்தே பாரத் ரயிலின் முதல் ஸ்லீப்பர் பெட்டிகள் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த ரயில், சில தொழில்நுட்ப வசதிகள் சரி பார்க்கப்பட்ட பின், ஒரு மாதத்துக்குள் சென்னை, ஐ.சி.எப்., தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு சோதனை ஓட்டம் நடத்திய பின், ரயில் சேவை துவங்கும். முதல் ரயில் சேவை இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும். அதன் பின் ஸ்லீப்பர் பெட்டிகளின் தயாரிப்பு அதிகரிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் மாதத்துக்கு இரண்டு ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். தற்போது செயல்பாட்டில் உள்ள வந்தே பாரத் ரயிலின் அனுபவத்தில் இருந்து அதை மேலும் மேம்படுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
ஒவ்வொரு ரயிலும், 16 பெட்டிகளை கொண்டிருக்கும். 823 பேர் பயணம் செய்யலாம். 11 ஏசி 3ம் வகுப்பு பெட்டிகளில் 611 பேரும்; 4 ஏசி 2ம் வகுப்பு பெட்டிகளில், 188 பேரும்; 1 முதல் வகுப்பு பெட்டியில், 24 பேரும் பயணம் செய்யலாம் சோதனை ஓட்டத்தின் போது அதிகபட்சமாக 180 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும். பயணியருடன் இயக்கும் போது அதிகபட்சமாக 160 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும் ஒவ்வொரு பெட்டியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. இந்திய மற்றும் மேற்கத்திய வடிவமைப்பு கொண்ட கழிப்பறைகளும் உள்ளன. டிரைவர்களுக்கு தனியாக கழிப்பறையும் உள்ளது ஒவ்வொரு பெட்டிக்கு இடையில் சென்சார் வசதி கொண்ட நவீன கதவுகள் உள்ளன. ரயில் நிலையம் வந்தவுடன் தானாக திறக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது அவசர காலத்தில் அவசர கதவு களை ரிமோட் வாயிலாக திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியின் கடைசி பகுதியில் இந்த ரிமோட் பொருத்தப்பட்டிருக்கும் முதல் வகுப்பு பெட்டியில் வெந்நீரில் குளிக்கும் வசதி உள்ளது ஒவ்வொரு இருக்கைக்கும் படிப்பதற்காக எல்.இ.டி., மின் விளக்கு, மொபைல் மற்றும் லேப்டாப் சார்ஜிங் பாயின்ட், குடிநீர் பாட்டில் வைப்பதற்கும், பை வைப்பதற்கும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன ஒவ்வொரு ரயில் நிலையத்தின் பெயரும் எல்.இ.டி., திரையில் தெரியும் வசதியும், ஆடியோ வாயிலாக கேட்கும் வசதியும் உள்ளன மேல்படுக்கைக்கு ஏறுவதற்கு ஏணி வசதி செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு பெட்டியிலும் தனி தனியாக சிறிய உணவகம் இருக்கும். உணவு பதப்படுத்தி வைக்க குளிர்சாதன வசதியும், சூடாக உணவு பரிமாறுவதற்கு தனி வசதியும் உள்ளன உணவு பரிமாறுவதற்கும், சுத்தம் செய்வதற்கும் ஊழியர்கள் இருப்பர். அவர்களுக்கு அந்தந்த பெட்டியிலேயே துாங்குவதற்கு படுக்கை வசதி உள்ளது.