சமூக வலைதளங்களில் பரவும் வதந்தீ : போக்சோ ஆசிரியரால் பெற்றோர் தவிப்பு
மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளியில் பணியாற்றிய 'போக்சோ' ஆசிரியர் மொபைல் போனில் ஆபாச வீடியோ, படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. மாணவியரின் பெற்றோர் கலக்கம் அடைந்துள்ளனர்.கோலார் மாவட்டம், மாலுார் எலுவஹள்ளி கிராமத்தில், சமூக நலத்துறைக்கு உட்பட்ட மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள 'செப்டிக் டேங்கை' மாணவர்களை சுத்தம் செய்த வீடியோ, கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியானது.இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் கலை ஆசிரியர் முனியப்பா கைது செய்யப்பட்டார். அவரது மொபைல் போனை போலீசார் ஆய்வு செய்தபோது, மாணவியர் உடை மாற்றுவது உள்ளிட்ட ஏராளமான படங்களும், வீடியோக்களும் இருந்தன.இதன் அடிப்படையில் முனியப்பா மீது 'போக்சோ' வழக்குப் பதிவானது. தன் மீது பதிவான போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முனியப்பா மனுத்தாக்கல் செய்தார். அவரது மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.இந்த விவகாரம் தற்போது கோலார் மாவட்டத்தில் மீண்டும் புயலைக் கிளப்பி உள்ளது. முனியப்பா மொபைல் போனில் இருந்த மாணவியரின் ஆபாச வீடியோ, படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது.இதனால் முனியப்பா பணியாற்றிய உறைவிடப் பள்ளியில் படித்த மாணவியரின் பெற்றோர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உறைவிடப் பள்ளியில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.தங்கள் பிள்ளைகளின் வீடியோ, படங்கள் இருந்தால் என்ன செய்வது என்பது புரியாமல் தவித்து வருகின்றனர்.'சம்பந்தப்பட்ட ஆசிரியரின் மொபைல் போனை போலீசார் கைப்பற்றியதால் தான் இந்த விவகாரமே வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது போலீஸ் வசம் அந்த மொபைல் போன் இருப்பதால் பெற்றோர் கவலை கொள்ளத் தேவையில்லை. 'போலீசாரிடம் இருந்து எந்த ஒரு வீடியோவும் படமும் வெளியாக வாய்ப்பில்லை' என, மாணவியரின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.மாலுாரின் மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளியில் கலை ஆசிரியராக இருந்த முனியப்பாவை, கர்நாடக மாநில உறைவிடப் பள்ளி நிர்வாகம், நடப்பாண்டு ஜூன் 5ல் இடைநீக்கம் செய்தது. அவர் மீது, மாஸ்தி போலீஸ் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது, அவர் கோலார் மாவட்டத்தில் பணி செய்யவில்லை.சீனிவாசன்,இணை இயக்குனர்,கோலார் மாவட்ட சமூக நலத்துறை
பள்ளி நிர்வாகம் விளக்கம்
குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர், தற்போது எங்கள் பள்ளியில் இல்லை. சில சமூக வலைதளங்கள் தற்போது இங்கு பணிபுரியும் ஒரு ஆசிரியரை பற்றி தவறாக குறிப்பிடுகின்றன. இப்போது எங்கள் பள்ளியில் அந்த மாதிரியான எந்த பிரச்னையும் இல்லை. சம்பவம் நடந்தபோது, பணியில் இருந்த ஆசிரியர்கள், கெஸ்ட் ஆசிரியர்கள், சமையல் ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்டோர் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். - நமது நிருபர் -