உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இறுதிகட்ட லோக்சபா தேர்தலுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

இறுதிகட்ட லோக்சபா தேர்தலுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : லோக்சபா தேர்தலில், இறுதி கட்டமாக நடத்தப்படும் ஏழாம் கட்ட ஓட்டுப்பதிவுடன், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., புகழேந்தி மறைவு காரணமாக, அத்தொகுதி, ஏப்ரல், 6 முதல் காலியாக உள்ளது. அதன் விபரத்தை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தல் கமிஷனுக்கு முறைப்படி தெரியப்படுத்தி உள்ளார்.தற்போது நாடு முழுதும் லோக்சபா தேர்தல், ஏழு கட்டமாக நடத்தப்படுகிறது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில், முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல், 26ம் தேதி நடந்தது. மூன்றாம் கட்ட தேர்தல், வரும் 7ம் தேதி நடக்க உள்ளது. ஏழாம் கட்ட தேர்தல், ஜூன் 1ல் நடக்க உள்ளது.ஏழாம் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கையை, தேர்தல் ஆணையம் வரும் 7ல் முறைப்படி அறிவிக்க உள்ளது. அன்றைய தினம், வேட்பு மனு தாக்கல் துவங்கும்; ஜூன் 1ல் ஓட்டுப்பதிவு நடக்கும். அதேபோல், அந்த தேதியில், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்தால், அதற்கு முன்னதாகவே அறிவிப்பை வெளியிட வேண்டும். அதன்பின், வரும் 7ல் மனு தாக்கல் துவங்கப்பட்டு, ஜூன் 1ல் ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும். அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை. இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், தேர்தல் நடத்த தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பு உள்ளன. இடைத்தேர்தலை எப்போது நடத்துவது என்பதை, தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்யும்.ஏழாம் கட்ட லோக்சபா தேர்தலுடன், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடத்துவதாக இருந்தால், ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். ஏனெனில் ஏழாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மே 7ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினமே, வேட்பு மனு தாக்கல் துவங்கி விடும்.தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டு, குறைந்தபட்சம், 30 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். எனவே, இடைத்தேர்தல் நடத்துவதாக இருந்தால், உடனடியாக தனி அறிவிப்பு வெளியிடப்படும். இல்லையெனில் லோக்சபா தேர்தலுக்கு பின் தனியே அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது சரியான நேரம் அல்ல!

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை, லோக்சபா கடைசி கட்ட தேர்தல் நடக்கும் ஜூன் 1ல் நடத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு, இது சரியான நேரம் அல்ல; அதற்கான அவகாசமும் இல்லை. தமிழகத்தில், 10 நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது. மே 4ல் துவங்கும் கத்தரி வெயில் காலத்தில், 116 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகும் என்று, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பிரசாரம் செய்தால், பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும். வெப்ப மயக்க நோய் ஏற்பட்டால் உயிரிழப்பு கூட ஏற்படலாம். எனவே, செப்டம்பர், அக்டோபரில் நடக்கவுள்ள ஜம்மு - காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தலோடு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலையும் நடத்தலாம். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக தீர்மானிக்க கூடாது. தமிழக அரசு, கட்சிகளுடன் கலந்து பேசிதான், தேதியை தீர்மானிக்க வேண்டும்.- ராமதாஸ்,பா.ம.க., நிறுவனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anbuselvan
மே 01, 2024 08:11

இறுதி கட்ட லோக் சபா தேர்தலுடன் விரவாண்டி இடை தேர்தல் நடக்க சாத்தியமே இல்லை யாருக்கு பலம் அதிகமாக ள்ளது என்பதை ஜூன் மாதம் கண்டறிந்த பிறகே இந்த இடை தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது


Kasimani Baskaran
மே 01, 2024 05:49

அப்படியே ஜெயித்து வந்தவுடன் தொகுதியில் பாலும் தேனும் ஓடும் வீண் செலவு ஓட்டை விற்போருக்கு சிறிது பணம் கிடைக்கும் மற்றப்படி ஒரு பயனும் இல்லை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை