பெங்களூரு: தார்வாடுக்குச் செல்ல அனுமதி கோரி, காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி தாக்கல் செய்த மனுவை, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து பா.ஜ., உறுப்பினராக இருந்தவர் யோகேஷ் கவுடா. இவர் 2016 ஜூன் 15ல், மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். முதலில் இந்த வழக்கை, மாநில போலீசார் விசாரித்தனர். பலரை கைது செய்தனர். அதன்பின் எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு பணிந்து, அன்றைய காங்கிரஸ் அரசு, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைத்தது. கைது
சி.பி.ஐ., விசாரித்தபோது, யோகேஷ்கவுடா கொலையில், காங்கிரஸ் தலைவர் வினய் குல்கர்னிக்கு தொடர்பிருப்பதை கண்டுபிடித்தது. கைது செய்யப்பட்ட இவர், பல மாதங்கள் சிறையில் இருந்தார். கீழ்நிலை நீதிமன்றங்கள், கர்நாடக உயர்நீதிமன்றம் இவருக்கு ஜாமின் அளிக்க மறுத்தன.உச்சநீதிமன்றம் சென்று, ஜாமின் பெற்றார். 'தார்வாடில் கால் பதிக்கக் கூடாது, சாட்சிகளை மிரட்டவோ, கலைக்கவோ முயற்சிக்கக் கூடாது' என, நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. எனவே அவரால் தார்வாடுக்கு செல்ல முடியவில்லை.சட்டசபை தேர்தலில், தார்வாட் ரூரல் தொகுதியில் காங்., வேட்பாளராக போட்டியிட்டபோது, பிரசாரம் செய்ய தார்வாடுக்குச் செல்ல அனுமதி கேட்டார். இதுகுறித்து, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் கோரும்படி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.சமூக வலைதளம் வழியாக பிரசாரம் செய்து, வெற்றி பெற்றார். எம்.எல்.ஏ.,வாக இருப்பதால், தொகுதி பணிகளை கவனிக்க வேண்டும். எனவே தார்வாடுக்கு செல்ல விரும்புகிறேன் என்றார். அதற்கும், நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டது. ஓட்டுப்போட அனுமதி
லோக்சபா தேர்தலில் ஓட்டுப்போட, தார்வாடுக்கு செல்ல அனுமதி கிடைத்தது. ஓட்டுப் போட்டவுடன் அங்கிருந்து வெளியேற வேண்டும், ஊடகத்தினரை சந்திப்பது, கட்சி கூட்டம் நடத்துவதோ கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே ஓட்டுப் போட்டவுடன், தார்வாடில் இருந்து வெளியேறினார்.ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க அனுமதி கேட்டு, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் இவரது மனு தள்ளுபடியானது.