உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணத்தை கண்ணில் காட்டாத தேசிய கட்சிகள் தங்கவயலில் தொண்டர்கள் அதிருப்தி

பணத்தை கண்ணில் காட்டாத தேசிய கட்சிகள் தங்கவயலில் தொண்டர்கள் அதிருப்தி

கோலார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட தங்கவயல் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா. தங்கவயல் தொகுதியில் கிராமப் பகுதியில் 106; நகர பகுதியில் 115 என மொத்தம் 221 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் பூத் கமிட்டி அமைக்கப்படவில்லை.சட்டசபை தேர்தலின் போது மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே பூத் கமிட்டி அமைத்து தலா 20 பேர் கொண்ட குழு உருவாக்கி, அவர்களை கவனிக்க வேண்டிய விஷயத்தில் கவனித்தனர். கிராம பகுதிகளில் 15 கிராம பஞ்சாயத்துகள், நகர பகுதியில் 35 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் குறைந்தது 4, அதிகபட்சம் 6 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.

குறைந்த பணம்

ஒரு ஓட்டுச்சாவடியில் 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், தொண்டர்கள், தினமும் தலா 500 ரூபாய் எதிர்பார்க்கின்றனர். கட்சி பொறுப்பாளர்கள் வழங்கிய தொகையை தொண்டர்களுக்கு பிரித்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சி பிரமுகர்கள் வெறுப்படைந்து உள்ளனர். வார்டு கவுன்சிலர்கள் வாடிய முகத்துடன் உள்ளனர். இந்த தொகையில், வீடுகள் தோறும் துண்டறிக்கைகள் மட்டும் வழங்க முடியுமா என்பது கேள்விக்குறி.தங்கவயல் தொகுதியில் தேர்தல் செலவுக்கு வந்தது 50 லட்சம் ரூபாயாம். இதில், மாலுார் ராகுல் கூட்டத்துக்கு 50 பஸ்களில் சென்றது, ஓட்டுச்சாவடிக்காக தலா 10 ஆயிரம் ரூபாய் பட்டுவாடா செய்தது ஆகியவைகளுக்கே பணம் தீர்ந்து விட்டதாம்.சட்டசபை தேர்தலில் பல கோடிகள் புரண்டதாக கூறப்பட்டது. லோக்சபா தேர்தலில் இந்த தொகுதிக்கு 50 லட்சம் ரூபாய் போதுமானதல்ல என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது.ஒரு வேளை, ரூபகலாவின் சகோதரி கணவருக்கு 'சீட்' கிடைத்திருந்தால் சட்டசபை தேர்தலில் காட்டிய அக்கறையை விட அதிகமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.

தே.ஜ., கூட்டணி

பா.ஜ., தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ம.ஜ.த.,வுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.இத்தொகுதியில் பா.ஜ.,வில் சிட்டிங் எம்.பி., முனிசாமி மீண்டும் சீட் எதிர்ப்பார்த்தார். மீண்டும் பா.ஜ., களத்தில் இருந்திருந்தால் ஓட்டுச்சாவடிகளில் அக்கட்சியினர் உற்சாகமாக களம் கண்டிருப்பர். தேர்தலில் போட்டியிடும் ம.ஜ.த.,வினர் இதுவரை பூத்கமிட்டி அமைக்கவில்லை.இருப்பினும் தேர்தல் செலவுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை பா.ஜ.,வின் மூன்று கோஷ்டியும் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. நரேந்திர மோடி பிரதமர் ஆக வேண்டும் என்பதால், பா.ஜ.,வை சேர்ந்த சிலர், தங்கள் சொந்த பணத்தை செலவழிக்கின்றனர்.

ம.ஜ.த.,

ம.ஜ.த.,வில் இரண்டு கோஷ்டிகள் உள்ளன. இவர்கள் தனித்தனியாக பிரசாரம் செய்கின்றனர். தனித் தன்மையுடன் செயல்படுவதாக தெரியவில்லை. எல்லாரும் பா.ஜ.,வை முன்னிறுத்தி, பின் தொடர்ந்து செல்கின்றனர்.இவர்களும் பூத்கமிட்டி அமைக்கவில்லை. வார்டு தோறும் உள்ள கட்சி நிர்வாகிகளை ஓட்டு கேட்க வைக்கின்றனர். வெறும் கையில் முழம் போட சொல்கின்றனரே என்று அவர்களும் பல்லவி பாடுகின்றனர். மொத்தத்தில், இந்த லோக்சபா தேர்தலில் 'நோட்டுக்கு ஓட்டு' என்ற நிலை இல்லை என்றே தெரிகிறது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை