உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தகவலை பகிர வற்புறுத்தினால் வெளியேறுவோம் அரசின் அழுத்தத்துக்கு வாட்ஸாப் மிரட்டல்

தகவலை பகிர வற்புறுத்தினால் வெளியேறுவோம் அரசின் அழுத்தத்துக்கு வாட்ஸாப் மிரட்டல்

புதுடில்லி, 'வாட்ஸாப் செயலி வாயிலாக பகிரப்படும் குறுஞ்செய்திகள், ஒலி அழைப்புகள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை அளிக்கும்படி மத்திய அரசு வற்புறுத்தினால், இந்தியாவில் வாட்ஸாப் சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்' என, 'மெட்டா' நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்ப்பு

அமெரிக்காவை சேர்ந்த, 'மெட்டா' நிறுவனம், 'பேஸ்புக், வாட்ஸாப்' உள்ளிட்ட சமூக ஊடக சேவைகளை உலகம் முழுதும் அளித்து வருகிறது. இந்தியாவில் மட்டும், வாட்ஸாப் சேவையை, 40 கோடி பேர் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது.வெறும் குறுஞ்செய்தி தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி, ஒலி அழைப்புகள், பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளையும் அந்த செயலி அளித்து வருகிறது.வாட்ஸாப்பை பொறுத்தவரை, 'என்ட் டு என்ட் என்க்கிரிப்டட்' எனப்படும் தகவல் பாதுகாப்பை அளிக்கிறது. அதாவது, வாட்ஸாப் செயலி வாயிலாக பகிரப்படும் குறுஞ்செய்திகள், ஒலி வடிவ செய்திகள், ஒலி அழைப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் உட்பட அனைத்தும், இரு முனைகளிலும் வெளி நபர்களால் அணுக முடியாத அளவுக்கு தொழில்நுட்ப பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.வாட்ஸாப் நிறுவனத்தில் உள்ளவர்களால் கூட, அந்த தகவல்களை அணுக முடியாது.அப்படியிருக்கையில், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021ன் கீழ், தேவைப்படும் தகவல்களை அரசு அணுக அனுமதி அளிக்க வேண்டும் என, சமூக ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.இதற்கு பல சமூக ஊடக நிறுவனங்கள் இணங்கிய நிலையில், வாட்ஸாப் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இது தொடர்பான வழக்கு டில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த விசாரணையின் போது, 'பயனர்கள் பகிரும் தகவல்களை வெளியிடும்படி மத்திய அரசு தொடர்ந்து வற்புறுத்தினால், இந்தியாவில் வாட்ஸாப் சேவையை நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்' என, மெட்டா நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அனுமதி

அது குறித்து, மெட்டா நிறுவனத்தின் இந்திய அதிகாரி தேஜஸ் காரியா கூறியதாவது:வாட்ஸாப் செயலி வாயிலாக பகிரப்படும் தகவல்கள் வெளியே கசியாமல், மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்ற காரணத்தால் தான், உலகம் முழுதும் கோடிக்கணக்கானோர் அதை பயன்படுத்துகின்றனர். எனவே, பயனர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை சிதைக்கும் விதமாக, தகவல்களை அணுக அனுமதி தரும்படி தொடர்ந்து வற்புறுத்தினால், சேவையை நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.வேறு சில நாடுகளும் வாட்ஸாப் நிறுவனத்துக்கு இதே போன்ற அழுத்தத்தை கொடுத்து வருகின்றன. அங்கும் அவர்கள் தங்கள் கொள்கையில் இருந்து சற்றும் பின்வாங்காமல் போராடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை