| ADDED : மே 16, 2024 01:57 AM
புதுடில்லி:தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்கான அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்குவது குறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து, டில்லியின் மையப்பகுதியில் கட்சி அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கக்கோரி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திடம் ஆம் ஆத்மி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை கடந்த ஆண்டு ஜூன் 26, செப்டம்பர் 15 ஆகிய தேதிகளில் அமைச்சகம் நிராகரித்தது.தீன் தயாள் உபாத்யாய் மார்க்கிலோ அல்லது டில்லியின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிற இடங்களிலோ காலி நிலம் எதுவும் இல்லை என, மத்திய அமைச்சகம் கூறியது.இதையடுத்து தேசிய தலைநகரில் தங்கள் கட்சியின் அலுவலகம் கட்ட 1,000 ச.மீ., இடம் ஒதுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்திருந்தது.இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு அறிய விரும்புவதாகக் கூறி, வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.