உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4 ஆண்டுகளில் ஒரு தேர்வு கூட என்.ஆர்.ஏ., நடத்தாதது ஏன்? மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

4 ஆண்டுகளில் ஒரு தேர்வு கூட என்.ஆர்.ஏ., நடத்தாதது ஏன்? மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

புதுடில்லி: 'கடந்த நான்கு ஆண்டுகளில் தேசிய பணியாளர் தேர்வு முகமை சார்பில் ஒரு தேர்வு கூட நடத்தப்படாதது ஏன்?' என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு அலுவலகங்களில் குரூப் 'பி' மற்றும் குரூப் 'சி' பணியிடங்களை பொதுத் தேர்வு வாயிலாக நிரப்புவதற்காக என்.ஆர்.ஏ., எனப்படும் தேசிய பணியாளர் தேர்வு முகமை கடந்த 2020ல் துவங்கப்பட்டது. இந்த முகமை துவங்கி நான்கு ஆண்டுகளாகியும் எந்த தேர்வும் நடத்தப்படாதது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:'கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு என்.ஆர்.ஏ., ஓர் வரப்பிரசாதமாக இருக்கும்; இதன் வாயிலாக நடத்தப்படும் பல பொதுத் தகுதித் தேர்வுகள் பொன்னான நேரத்தையும், வளங்களையும் மிச்சப்படுத்தும். இது வெளிப்படைத்தன்மைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்' என, பிரதமர் கூறியிருந்தார். இது குறித்து நான் மூன்று கேள்விகள் கேட்க விரும்புகிறேன். கடந்த நான்கு ஆண்டுகளில் என்.ஆர்.ஏ., வாயிலாக ஏன் ஒரு தேர்வு கூட நடத்தப்படவில்லை? இந்த முகமைக்கு 1,517.57 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டும், நான்கு ஆண்டுகளில் இதுவரை, 58 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது ஏன்? அரசு வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு அமைப்பாக உருவாக்கப்பட்ட முகமை, எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும் வகையில் வேண்டுமென்றே செயலிழக்கச் செய்யப்பட்டதா?கல்வி முறையை அழித்து இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் செயலை பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்