நான் கருப்பாக இருப்பதால் மனைவி பிரிந்து விட்டாள்! போலீசில் புகார் அளித்த கணவர்
குவாலியர்,மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. சமீபத்தில் இத்தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கைக்குழந்தையை கணவன் வீட்டிலேயே விட்டுவிட்டு, அவரது மனைவி தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.அவரை மீண்டும் வீட்டிற்கு அழைக்கச் சென்றபோது, கணவன் தன்னை கொடுமைப்படுத்துவதாக மகளிர் போலீசில் அப்பெண் புகார் அளித்துள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள கணவர், தான் கருப்பாக இருப்பதை காரணம் காட்டி மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.அதில், 'திருமணமான சில நாட்களில் இருந்தே என் கருப்பு நிறத்தை காரணம் காட்டி மனைவி பிரச்னை செய்து வந்தார்; பலர் முன்னிலையில் கிண்டல் செய்வார். 'குழந்தை பிறந்த 10 நாட்களில், குழந்தையை என்னிடம் விட்டுவிட்டு அவரின் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். திரும்ப அழைக்கச் சென்றபோது, கருப்பாக இருப்பதால் வாழ விருப்பமில்லை எனக்கூறி வர மறுத்துவிட்டார்' என்று கூறியுள்ளார். இருவருக்கும் தகுந்த ஆலோசனை மற்றும் அறிவுரை கூற போலீசார் முடிவு செய்துள்ளனர்.