உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெல்லப்போவது சீனியரா... ஜூனியரா?

வெல்லப்போவது சீனியரா... ஜூனியரா?

லிங்காயத் செல்வாக்குள்ள, கர்நாடகாவின் மூன்று லோக்சபா தொகுதிகளை பா.ஜ., தக்க வைத்து கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.கர்நாடகாவின் 14 லோக்சபா தொகுதிகளுக்கு, நாளை ஓட்டு பதிவு நடக்கவுள்ளது. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் 'திக்திக்' மனதுடன் ஓட்டு பதிவுக்காக காத்திருக்கின்றனர். ஓட்டுப்பதிவு நடக்கும் 14 தொகுதிகளிலும், பா.ஜ., காங்கிரஸ் இடையே நேரடி போட்டி எழுந்துள்ளது.குறிப்பாக லிங்காயத் செல்வாக்குள்ள தார்வாட், பெலகாவி, ஹாவேரியை தன் வசம் தக்க வைத்து கொள்ள பா.ஜ., போராடுகிறது. அதே போன்று தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என, ஆளுங்கட்சியான காங்கிரஸ் முயற்சிக்கிறது.

அரசியல் எதிர்காலம்

பெலகாவியில் ஜெகதீஷ் ஷெட்டர், ஹாவேரியில் பசவராஜ் பொம்மை, தார்வாடில் பிரஹலாத் ஜோஷி களத்தில் உள்ளனர். இது மூன்று மூத்த தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்தலாகும். மூன்று தலைவர்களும் தொகுதி வளர்ச்சி, தங்களின் சொந்த செல்வாக்கை விட, மோடி அலையை அதிகம் நம்பியுள்ளனர்.இந்த மூன்று தொகுதிகளிலும், லிங்காயத் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம். இவர்களின் ஓட்டுகள் மீது, கண் வைத்துள்ளனர். இந்த சமுதாயங்களின் மடாதிபதிகளின் ஆதரவை பெற, இரண்டு கட்சிகளும் துடிக்கின்றன. ஒரே சமுதாயத்தின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால், ஓட்டுகள் பிரியும் வாய்ப்புள்ளது.காங்கிரஸ் வேட்பாளர்களாக தார்வாடில் வினோத் அசூட்டி, ஹாவேரியில் ஆனந்தய்யா கட்டதேவரமடா, பெலகாவியில் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மகன் மிருணாள் களத்தில் உள்ளனர். மூவருமே தேர்தலுக்கு புதிய முகங்கள். ஆனால் பா.ஜ., வேட்பாளர்கள் அரசியலில் பழம் தின்று, கொட்டை போட்டவர்கள். இவர்களை தோற்கடித்து தொகுதியை கைப்பற்றுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என, அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.இதை மனதில் கொண்டே, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். வாக்குறுதி திட்டங்கள் மக்களுக்கு பயன் அளிக்கின்றன. எனவே வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என, காங்கிரஸ் நம்புகிறது. மூன்று தொகுதிகளில் வெல்ல போவது சீனியர்களா, ஜூனியர்களா, மோடி அலையா அல்லது வாக்குறுதி திட்டங்களா என்பது, ஜூன் 4ல் தெரியும்

மடாதிபதி கருத்து

கதக்கின் தோண்டதார்ய மடத்தின், சித்தராம சுவாமிகள் கூறியதாவது:லிங்காயத்களை பா.ஜ., அதிகம் நம்புகிறது. இந்த தேர்தலிலும் லிங்காயத்களை ஈர்க்க முயற்சி நடக்கிறது. ஆனால் இந்த சமுதாயத்தினரின் ஓட்டுகள், தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என, நான் கருதுகிறேன்.அரசியல் கட்சிகள், தங்களின் சுய லாபத்துக்காக சமுதாயத்தை பயன்படுத்துவது துரதிருஷ்டவசம். வாக்காளர்கள் ஏமாறக்கூடாது. ஜாதி, மதங்களை பாராமல் தொகுதிக்கு தேவையான திறமையான வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ