உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போராடினால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா? பத்லாபூர் போலீசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

போராடினால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா? பத்லாபூர் போலீசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

மும்பை, மஹாராஷ்டிராவின் பத்லாபூரில், இரண்டு சிறுமியர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மும்பை உயர் நீதிமன்றம், 'மக்கள் போராட்டத்தில் இறங்கினால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா?' என, சரமாரியாக கேள்வி எழுப்பியது.மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பத்லாபூரில் உள்ள தனியார் பள்ளியில், நான்கு வயது சிறுமியர் இருவர், துப்புரவு தொழிலாளியால் பாலியல் வன்முறைக்கு ஆளாகினர்.இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகே போலீசார், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தனர். அதுவும் மக்கள் போராட்டத்தில் இறங்கியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.இந்த வழக்கு, நீதிபதிகள் ரேவதி மொகிதே தாவே, பிருத்விராஜ் சவான் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதிர்ச்சிஅப்போது அமர்வு கூறியுள்ளதாவது:இந்த விவகாரத்தில் நடந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை தருவதாக உள்ளன. பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமியர் இருவர், பள்ளி வளாகத்திலேயே பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர்.சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகே, போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். அதுவும் பொதுமக்கள் போராட்டங்களில் இறங்கிய பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த நாள்தான் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.மாணவியர் மீது வன்முறை நடந்துள்ளது தெரிந்தும், பள்ளி நிர்வாகம் அது குறித்து போலீசுக்கு தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர் புகார் கொடுத்தும், அதை பதிவு செய்யாமல், போலீசார் இழுத்தடிப்பு செய்துள்ளனர்.பள்ளி வளாகத்திலேயே மாணவியருக்கு பாதுகாப்பு இல்லாதபோது என்ன செய்வது. போக்சோ சட்டத்தின்படி, குற்றத்தை மறைப்பது, அது குறித்து தகவல் தெரிவிக்காததும் குற்றமே. அதன்படி, பள்ளி நிர்வாகத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?மாணவியரின் பெற்றோர் புகார் அளித்தும், அதை உடனடியாக பதிவு செய்யாமல், இழுத்தடிப்பு செய்த போலீசார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு நடந்துள்ள கொடூரம் குறித்த உணர்வு கூடவா போலீசாருக்கு இல்லை.பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டால்தான் போலீசாரும், மாநில நிர்வாகமும் நடவடிக்கை எடுக்குமா. இது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும். மக்களை போராட்டத்தில் ஈடுபட போலீசும், மாநில நிர்வாகமும் துாண்டுவதாகவே அமைந்துவிடும்?மக்கள் போராட்டத்தால் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது மாநில அரசு. போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த அளவுக்கு சென்றிருக்க வேண்டியதில்லை. பிரச்னைகளின் தீவிரம் குறித்து போலீசாருக்கு உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லையா, பயிற்சிகள் அளிக்கப்படவில்லையா. இந்த விஷயத்தை போலீசார் எந்தளவுக்கு சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளனர்; மாணவியர் உட்பட பெண்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதமாக போலீசார் இருக்க வேண்டாமா?இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியிடம் மட்டுமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மற்றொரு சிறுமியிடம் ஏன் இதுவரை வாக்குமூலம் பெறவில்லை. இந்த விவகாரத்தில் இதுவரை நடந்துள்ள சம்பவங்கள், நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக இல்லை.கெடுபாதிக்கப்பட்ட சிறுமியருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதுவே, போலீசாரின் நோக்கமாகவும் இருந்திருக்க வேண்டும். நடந்த சம்பவங்கள் தொடர்பாக இரண்டு மாணவியர் புகார் கொடுத்துள்ளனர். இவ்வாறு புகார் கொடுக்காத சம்பவங்கள் எத்தனை நடந்துள்ளதோ தெரியவில்லை. போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தால்தானே, புகார் அளிக்க மாணவியரும், பெற்றோரும் முன்வருவர்?இந்த சம்பவத்தில் போலீஸ் மற்றும் சிறப்பு விசாரணை குழு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள், அறிக்கைகளை, வரும் 27ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி