உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹொரநாடில் யாகம் நடத்திய எடியூரப்பா குடும்பத்தினர்

ஹொரநாடில் யாகம் நடத்திய எடியூரப்பா குடும்பத்தினர்

சிக்கமகளூரு: லோக்சபா தேர்தல் நெருங்குவதால், முன்னாள் முதல்வர் எடியூரப்பா குடும்பத்தினர், பிரசித்தி பெற்ற ஹொரநாடு அன்னபூர்னேஸ்வரி தேவி கோவிலுக்கு சென்று, சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடத்தினர்.பா.ஜ.,வின் மூத்த தலைவர் எடியூரப்பாவுக்கு, எதிர்க்கட்சிகளை விட, சொந்த கட்சியிலேயே எதிரிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக அவரது இளைய மகன் விஜயேந்திரா, மாநில பா.ஜ., தலைவரான பின் பல தலைவர்கள் உள்ளுக்குள் புகைவது, ஊரறிந்த ரகசியம். பசனகவுடா எத்னால், ஈஸ்வரப்பா, ரவி உட்பட சிலர் பகிரங்கமாகவே எடியூரப்பாவை விமர்சிக்கின்றனர்.லோக்சபா தேர்தலில் ஷிவமொகா தொகுதியில், எடியூரப்பாவின் மூத்த மகனும், இன்னாள் எம்.பி.,மான ராகவேந்திராவுக்கு பா.ஜ., மேலிடம், இம்முறையும் சீட் கொடுத்துள்ளது. இவரை தோற்கடிக்க பா.ஜ.,வுக்குள்ளேயே, முயற்சி நடக்கிறது.விஜயேந்திரா மாநில தலைவரான பின், அவர் எதிர் கொள்ளும் முதல் தேர்தல் இதுவாகும். எனவே இதில் அதிகமான தொகுதிகளில் பா.ஜ., வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டிய மிக பெரிய பொறுப்பு இவரிடம் உள்ளது. கடந்த முறை லோக்சபா தேர்தல் பொறுப்பை, எடியூரப்பா ஏற்றிருந்தார். பா.ஜ., 25 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இம்முறை அவரது மகன் விஜயேந்திரா தலைமையில், தேர்தல் நடக்கவுள்ளது. தந்தையின் செல்வாக்கு, பிரதமர் நரேந்திர மோடி அலை, மத்திய அரசின் திட்டங்கள், மாநிலத்தில் பா.ஜ., அரசு செய்துள்ள சாதனைகளால், 20 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என, விஜயேந்திரா நம்புகிறார்.கர்நாடகாவில் பா.ஜ., மிக அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தன் மீது மேலிடம் வைத்துள்ள நம்பிக்கை பொய்யாக கூடாது என, கடவுளை எடியூரப்பா நாடியுள்ளார். சிக்கமகளூரு, களசாவின், பிரசித்தி பெற்ற அன்னபூர்னேஸ்வரி கோவிலுக்கு எடியூரப்பா குடும்பத்தினர் சென்றுள்ளனர்.முன்னதாக நேற்று முன் தினம் இரவே, ஹொரநாடுவுக்கு வருகை தந்தனர். நேற்று அதிகாலை, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினர். சண்டி யாகம் நடத்தினர். 'எதிரிகளின் தொந்தரவு நீங்க வேண்டும்' என யாகம் நடத்தியதாக தெரிகிறது. இதில் எடியூரப்பாவின் மகன்கள், மருமகள்கள் உட்பட குடும்பத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ