பெங்களூரு: தென்மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழகம், கர்நாடகாவின் 15 ரயில் நிலையங்களை 'அம்ரித் பாரத் நிலையம்' திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணியை, வரும் 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்.இது தொடர்பாக தென்மேற்கு ரயில்வே பெங்களூரு பிரிவு மேலாளர் யோகேஷ் மோகன் கூறியதாவது:இந்திய ரயில் நிலையங்களை மேம்படுத்தும் வகையில், ஏ.பி.எஸ்.எஸ்., என்ற 'அம்ரித் பாரத் நிலையம்' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.கர்நாடகாவில் பங்கார்பேட், சென்னபட்டணா, தொட்டபல்லாபூர், ஹிந்துப்பூர், கெங்கேரி, கிருஷ்ணராஜபுரம், குப்பம், மல்லேஸ்வரம், மாலுார், மாண்டியா, ராம்நகர், துமகூரு, ஒயிட்பீல்டு, தமிழகத்தின் ஓசூர், தர்மபுரி ஆகிய 15 ரயில் நிலையங்கள், 372.13 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட உள்ளன.இப்பணியை, வரும் 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, காணொலி மூலம் துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தில் ரயில் நிலையத்திற்கு சிறந்த நுழைவு வாயில், காத்திருப்பு பகுதி, மின்னேற்றி (லிப்ட்), நகரும் படிக்கட்டு, துாய்மை, இலவச வைபை வசதி, 'ஒரே நிலையம் ஒரே தயாரிப்பு' ஸ்டால், தகவல் அமைப்பு உட்பட பல வசதிகள் செய்யப்பட உள்ளன.இது தவிர, சென்னபட்டணா - ஷெட்டிஹள்ளி; மக்காஜிப்பள்ளி - நாகசமுத்திரம் ஆகிய வழித்தடத்தில் உள்ள லெவல் கிராசங்கிற்கு பதிலாக, ரயில்வே கீழ் பாலம், கும்பரிகே நகரில் ரயில்வே மேம்பாலம் ஆகியவற்றுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.