மேலும் செய்திகள்
வெலிங்டன் பகுதியில் மண்சரிவு
25-Oct-2025
மூணாறு: கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அடிமாலி அருகே கூம்பன்பாறை லட்சம் வீடு காலனி பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் கணவர் பலியான நிலையில், மனைவி பலத்த காயங்களுடன் தப்பினார். அங்கிருந்த 22 குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி மாற்று இடத்திற்கு சென்றதால் உயிர் தப்பினர். கேரள மாநிலம், மூணாறு - கொச்சி இடையே 126 கி.மீ., துாரம் சாலை விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. அதனால் மண் எடுக்கப்பட்ட பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. அடிமாலி அருகே கூம்பன்பாறை லட்சம் வீடு காலனி பகுதியில், அக்., 24ல் மண் சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் மீண்டும் மண் சரிவு அபாயம் நிலவியதால், அங்கு வசித்த 22 குடும்பங்கள் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் அரசு பள்ளி நிவாரண முகாமுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், லட்சம் வீடு காலனியை சேர்ந்த பிஜு, 47, அவரது மனைவி சந்தியா, 41, ஆகியோர் உணவு அருந்தவும், சில முக்கிய ஆவணங்களை எடுத்து வரவும் முகாமில் இருந்து வீட்டிற்கு சென்றனர். அப்போது, எதிர்பாராத வகையில் மண் சரிவு ஏற்பட்டதில் இரு வீடுகள் சிறிய அளவிலும், ஆறு வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. முற்றிலுமாக சேதமடைந்த வீட்டினுள் பிஜு, சந்தியா சிக்கினர். அடிமாலி தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் ஆறு மணி நேரம் போராடி பிஜுவின் உடலை மீட்டனர். பலத்த காயமடைந்த சந்தியா மீட்கப்பட்டு, எர்ணா குளம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிவாரண முகாமிற்கு இடம்பெயர்ந்ததால், 22 குடும்பத்தினர் தப்பினர். கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின், இடுக்கி எம்.பி., டீன் குரியாகோஸ், கலெக்டர் தினேசன் செருவாட் ஆகியோர் சம்பவயிடத்தை பார்வையிட்டனர்.
25-Oct-2025