மைசூரு: விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தில் மூவரின் கண்களை தானம் செய்ததால், ஆறு பேருக்கு பார்வை கிடைத்தது.கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பாக்யம்மா, 50. இவரது மகன் சசிதர் 26, இவரது மனைவி ஷாலினி, 21. சசிதர் - ஷாலினிக்கு ஒன்பது மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் மைசூரு எச்.டி.கோட்டேயில் உள்ள சிக்கதேவம்மா மலையில் உள்ள கோவிலுக்கு ஒரே இருசக்கர வாகனத்தில் மூவரும் சென்றிருந்தனர்.சுவாமியை தரிசித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, குண்டுலுபேட்டின் ஹிரேகட்டி கேட் அருகே, எதிரே கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வந்த கார், இவர்கள் பைக் மீது மோதியது. இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.குண்டுலுபேட் போலீசார் வந்து, மூவரின் உடல்களையும் மீட்டு மைசூரு கே.ஆர்., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த சசிதரின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து கதறி அழுதனர். அந்த நேரத்திலும், மூவரின் கண்களையும் தானம் செய்ய ஒப்புக் கொண்டனர். இதையடுத்து மூவரின் கண்கள், கே.ஆர்., மருத்துவமனையின் கண்தான மையத்துக்கு வழங்கப்பட்டன.சசிதரின் பெரியப்பா குரு கூறுகையில், ''விபத்தில் மூவரும் உயிரிழந்து விட்டாலும், அவர்கள் கண்களை தானம் செய்தால், பார்வையற்றவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். ''இதை ஏற்று, இறந்தவர்களின் கண்கள் வழியாக, மற்றவர்கள் உலகை பார்க்கட்டும் என எண்ணி, தானம் செய்ய ஒப்புக் கொண்டோம். இதன் வாயிலாக, ஆறு பேருக்கு பார்வை கிடைத்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்,'' என்றார்.