30 காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி? பா.ஜ., பேரம் குறித்து ரவிகுமார் கவுடா பகீர்!
மாண்டியா: ''காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் பா.ஜ., தலா 100 கோடி ரூபாய் பேரம் பேசியது. 30 பேருக்கு அமைச்சர் பதவி அளிப்பதாகவும் ஆசை வார்த்தை கூறினர்,'' என, மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கவுடா 'பகீர்' தகவலை கூறியுள்ளார்.கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம் தலா 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாக சில தினங்களுக்கு முன்னர், முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டியிருந்தார்.இதை பா.ஜ., தலைவர்கள் மறுத்தனர். குற்றச்சாட்டுகளை நிரூபித்து காட்டும்படி சவால் விட்டனர்.காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பாபாசாகேப், ஹெச்.டி.தம்மையா ஆகியோர், பா.ஜ., தரப்பில் தங்களிடம் எந்த பேரமும் பேசவில்லை என கூறியிருந்தனர்.இதற்கு பதிலளிக்கும் விதமாக, நேற்று மாண்டியாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமார் கவுடா கூறியதாவது:ஒவ்வொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கும் தலா 50 கோடி ரூபாய் தருகிறோம் என பா.ஜ., பேரம் பேசியதாக முதல்வர் குற்றஞ்சாட்டி இருந்தார். சில நாட்களிலேயே அந்த தொகை, 100 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. பணம் தருவதாக பா.ஜ., கூறியதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதை உரிய நேரத்தில் வெளியிடுவேன். இதன்பின், முதல்வரை சந்தித்து, சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படும்.எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியை பா.ஜ., கைவிட வேண்டும். பா.ஜ.,வின் 'ஆப்பரேஷன் தாமரை'யில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் யாரும் சிக்க மாட்டார்கள்.காங்கிரசில் உள்ளவர்கள் உண்மையான விசுவாசிகள்; அவர்கள் கட்சி மாற மாட்டார்கள். பா.ஜ., மீதான குற்றங்கள் வெளியில் வருவதால், அவர்கள் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என காத்திருக்கின்றனர். 50 எம்.எல்.ஏ.,க்களிடம் பேரம் பேசியது மட்டுமின்றி, 30 பேரை அமைச்சர் ஆக்குவதாகவும் கூறி உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.