மற்றவர்களை குறை கூறுவதை விட தங்களை திருத்திக் கொள்வது நல்லது
சிவில் லைன்ஸ்:'காற்று மாசுபாட்டிற்கு சாலையில் இருக்கும் துாசி முக்கிய பங்களிக்கிறது. மற்றவர்களை குறை கூறுவதை விட, தங்களை திருத்திக் கொள்வது நல்லது' என, முதல்வர் ஆதிஷிக்கு எழுதிய கடிதத்தில் துணைநிலை கவர்னர் அறிவுரை கூறியுள்ளார்.காற்று மாசுபாடு நிலையை சுட்டிக்காட்டி முதல்வர் ஆதிஷிக்கு துணைநிலை கவர்னர் கடிதம் எழுதியுள்ளார். ஆய்வுகள் மற்றும் பல்வேறு இடங்களுக்குச் சென்ற அனுபவத்தை மேற்கோள் காட்டி, அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:நகரத்தில் ஏறக்குறைய 36 சதவீத காற்று மாசுபாடு சாலைகளில் உள்ள துாசியால் ஏற்படுகிறது. பெரும்பாலும் பதப்படுத்தப்படாத கட்டுமானம் மற்றும் கட்டட இடிப்பு கழிவுகளால் ஏற்படுகிறது.டில்லியின் காற்று மாசுக்கு, மற்ற மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பது 26 சதவீதம் காரணமாக இருக்கலாம். ஆனால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காரணிகளே மீதமுள்ள 74 சதவீதத்துக்கு காரணம்.சாலைகளை வழக்கமான பழுதுபார்ப்பு, நடைபாதைகளில் தரைவிரிப்பு, சிறிய புதர்கள் உருவாக்குவது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தலாம். இதுபோன்ற எளிய நடவடிக்கைகள், நிலைமையை கட்டுப்படுத்த உதவும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.இந்த விஷயத்தில் அசாதாரணமாக மோசமான நிலையில் உள்ள சாலைகளை பழுதுபார்ப்பது மிக முக்கியமானது. இந்த சாலைகளில் வாகனங்கள் செல்வதால் டன் கணக்கில் புழுதி பறக்கிறது.நகரில் துாசி பேரழிவை தணிக்க, முதல்வர் மற்றும் அவரது அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்.அண்டை மாநிலங்களில் இருந்து வரும் புகை, டில்லியின் நிலைமையை மோசமாக்குகிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். தேவைப்பட்டால், எங்களுக்கு உதவுமாறு அவர்களிடம் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.இருப்பினும், மற்றவர்களைக் குறை கூறுவதற்கு முன்பு அல்லது அவர்களின் உதவியைக் கேட்பதற்கு முன்பு நம்மை சரி செய்து கொள்வது முக்கியம்.இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி பதிலடி
ஆம் ஆத்மி வெளியிட்ட அறிக்கை:கோடைகால செயல் திட்டம், குளிர்கால செயல் திட்டம் மற்றும் மாசுபாட்டிற்கு எதிரான இலக்கு முயற்சிகள் செயல்படுத்தப்படும் ஒரே மாநிலம் டில்லி. இதன் விளைவாக, டில்லியில் மாசு 31 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. கடந்த தசாப்தத்தில் டில்லி தனது துாய்மையான காற்றை இந்த ஆண்டு சுவாசிக்கிறது.பா.ஜ., ஆளும் ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மூன்று நகரங்களில் மோசமான காற்று இருப்பதை புள்ளி விபரங்கள் தெளிவுப்படுத்தியிருக்கின்றன. இது பா.ஜ.,வின் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.