உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ள 4 தொகுதிகள்

பா.ஜ.,வுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ள 4 தொகுதிகள்

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சவால் நிறைந்த நான்கு தொகுதிகளில் வெற்றி பெற, பா.ஜ., வியூகம் வகுத்து வருகிறது.லோக்சபா தேர்தல் அறிவிப்பு விரைவில் வருகிறது. இதனால், கர்நாடகாவில் தேர்தல் ஜுரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் 28 தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜ., வியூகம் வகுத்து வருகிறது.வெற்றி வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளது. தேர்தலில் கட்சிக்கு ஆதரவான சூழலை உருவாக்க, ஏற்கனவே நியமிக்கப்பட்ட குழுவினர், 'பூத்' அளவில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.இதையும் மீறி, சில தொகுதிகள் பா.ஜ.,வுக்கு சவாலாக மாறி உள்ளதால், அவற்றில் வெற்றி பெற தலைவர்கள் வியூகம் வகுத்து வருகின்றனர்.உட்கட்சி சவால்களை எதிர்கொள்ளும் குறிப்பிட்ட பகுதிகளை, பா.ஜ., மேலிடம் ஏற்கனவே கண்டறிந்து உள்ளது. பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு தடையாக உள்ள காரணிகளையும் கண்டறிந்து உள்ளனர்.இந்த சவால்களை எதிர்கொள்வதற்கு சாத்தியமான வேட்பாளர்களை கண்டறியும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

சிக்கபல்லாப்பூர்

சிக்கபல்லாப்பூர் பா.ஜ.,வுக்கு பெரும் சவாலாக உள்ளது. இத்தொகுதியின் பா.ஜ., - எம்.பி., பச்சே கவுடா, வயது காரணமாக தேர்தலில் இருந்து விலகினார். அவரது மகன் சரத் பச்சே கவுடா, ஹொஸ்கோட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாகவும், துணை முதல்வர் சிவகுமாரின் நெருங்கிய வட்டாரத்தில் அடையாளம் காணப்பட்டவராகவும் உள்ளார்.சிக்கபல்லாபூர் காங்கிரஸ் தலைவர் சிவசங்கர் ரெட்டி, சிவகுமாரின் நெரங்கிய நண்பர். கடந்த சட்டசபையில் துணை சபாநாயகராகவும் பணியாற்றியவர். இதனால், அவரை பா.ஜ.,வுக்கு இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அப்படி, பா.ஜ.,வில் இணைந்தால், அவர் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராகலாம். இதுதவிர, எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் மகன் அலோக் விஸ்வநாத், முன்னாள் அமைச்சர் சுதாகர் ஆகியோர் சீட் எதிர்பார்த்து உள்ளனர். இதில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளருக்கே சீட் வழங்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

பெங்களூரு ரூரல்

பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதியில் காங்கிரசின் தற்போதைய எம்.பி., சுரேஷ், மீண்டும் போட்டியிடுவது உறுதி. சிவகுமாரின் கோட்டையை உடைக்க, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகனும், ஜெயதேவா மருத்துவமனையின் முன்னாள் இயக்குனருமான டாக்டர் மஞ்சுநாத்தை களமிறக்க பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் மஞ்சுநாத், போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இத்தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர் தீவிரமாக முயற்சித்து வருகிறார். இத்தொகுதி, கூட்டணியில் யாருக்கு கிடைக்கும் என தெரியவில்லை.

சாம்ராஜ் நகர்

பழைய மைசூரில், மைசூரு, மாண்டியா, ஹாசன், சாம்ராஜ் நகர் ஆகிய நான்கு லோக்சபா தொகுதிகள் உள்ளதால், பா.ஜ.,வுக்கு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.சாம்ராஜ் நகர் தொகுதி பா.ஜ., - எம்.பி.,யான சீனிவாச பிரசாத் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். இதன் பின்னணியில் புதிய வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு ஏற்பட்டு உள்ளது.இதுதவிர, 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தியதால், இங்கு பா.ஜ.,வுக்கு பலத்த போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மைசூரு

மைசூரு லோக்சபா தொகுதியில் மீண்டும் பா.ஜ., வேட்பாளராக பிரதாப் சிம்ஹா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய முகத்துக்கு சீட் கொடுத்தால் என்ன என்று பா.ஜ., தலைவர்கள் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. காங்கிரசில் இருந்து முதல்வர் சித்தராமையாவின் மகன் எதீந்திரா களம் இறங்கினால், பா.ஜ.,வின் வெற்றி கடினமாகும் என்றும் கூறப்படுகிறது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி