கலப்பட கள் குடித்த 4 பேர் தெலுங்கானாவில் பலி
ஹைதராபாத்: தெலுங்கானாவில், கலப்படம் செய்யப்பட்ட கள் குடித்த நான்கு பேர் பலியாகினர்.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதின் புறநகர் பகுதியான குகாட்பள்ளி, பாலாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கள்ளுக்கடைகளில் ஜூலை 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை கள் குடித்த சிலருக்கு உடல் நலப்பாதிப்பு ஏற்பட்டது.இதையடுத்து பாதிக்கப்பட்ட 38 பேர் ஹைதராபாதில் உள்ள நிஜாம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் ஆறு பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.இந்நிலையில் செகந்திராபாத் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கொத்தனார் சீதாராம், 47, என்பவர் 7ம் தேதி உயிரிழந்தார். இவர், எச்.எம்.டி., ஹில்ஸ் காலனியில் உள்ள கள்ளுக்கடையில் கள் குடித்தது தெரியவந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் மேலும் மூவர் பலியாகினர். இவர்களும் கள் குடித்ததாக கூறப்படுகிறது. கள்ளில் கலப்படம் செய்யப்பட்டதே இறப்புக்கு காரணமாக கூறப்படுறது.இது குறித்து ஹைதராபாத் போலீசார் கூறியதாவது:கள் குடித்த உடன் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். பலியான நான்கு பேர் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடல் உறுப்புகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கைகள் கிடைத்த பின்னரே இவர்களது இறப்புக்கு கலப்பட கள் காரணமா என தெரியவரும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் கலப்பட கள் விற்பனை செய்ததாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்மந்தப்பட்ட கள்ளுக்கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து பெறப்பட்ட கள் மாதிரி அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.