உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீலம்பூரில் 4 மாடி கட்டடம் இடிந்து 6 பேர் உயிரிழப்பு

சீலம்பூரில் 4 மாடி கட்டடம் இடிந்து 6 பேர் உயிரிழப்பு

புதுடில்லி:வடகிழக்கு டில்லி, சீலம்பூர் வெல்கம் காலனியில், நான்கு மாடி கட்டடம் இடிந்து, கட்டட உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர், ஆறு பேர் உயிரிழந்தனர். 1 வயது குழந்தை உட்பட எட்டு பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தலைநகர் டில்லியில் சமீபகாலமாக மிகப்பழமையான கட்டடங்கள் இடிந்து விழுகின்றன. சதர் பஜார் லோஹியா சவுக், மித்தாய் புல் அருகே, பரா இந்துராவ் பகுதியில், மூன்று மாடி வணிகக் கட்டடம், நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணிக்கு இடிந்து மனோஜ் சர்மா, 46, என்பவர் உயிரிழந்தார்.இந்நிலையில், வடகிழக்கு டில்லி வெல்கம் காலனி இத்கா சாலை அருகே, நான்கு மாடி கட்டடம் நேற்று காலை, 7:00 மணிக்கு இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.இடிபாடுகளை அகற்றும் போது, கட்டட உரிமையாளர் மத்லுப், 50, அவரது மனைவி ரபியா, 46, மகன்கள் ஜாவேத், 23, அப்துல்லா, 15, மற்றும் ஜூபியா, 27, அவரது மகள் போசியா, 2 ஆகிய, ஆறு பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மத்லுப் மகன்கள் பர்வேஸ், 32, நவேத், 19, மருமகள் சிசா, 21, பேரன் அஹமது, 1, எதிரில் உள்ள வீட்டில் வசிக்கும் கோவிந்த், 60, அவரது சகோதரர் ரவி காஷ்யப், 27, இருவரது மனைவியர் தீபா, ஜோதி, 27, ஆகியோர் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கட்டட உரிமையாளர் மத்லுாப் தன் குடும்பத்தினருடன், நான்காவது மாடியில் வசித்தார். தரைதளம் மற்றும் முதல் தளம் காலியாக இருந்தது. இந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததில் எதிரில் உள்ள கட்டடமும் சேதம் அடைந்தது. இடிபாடுகளை அகற்ற, காலை நடைப்பயிற்சிக்கு வந்திருந்தவர்களும், அந்தப் பகுதி மக்களும் உதவி செய்தனர். வடகிழக்கு டில்லி பா.ஜ., - எம்.பி. மனோஜ் திவாரி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வடகிழக்கு லோக்சபா தொகுதி சீலம்பூரில் வெல்கம் காலனியில் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. அதிகாரிகளிடம் விசாரித்தேன்.“மிகக் குறுகிய பாதையாக இருப்பதால், மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறினர். துரதிர்ஷ்டவசமாக, இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்,” என, கூறியுள்ளார்.

அமைச்சர் ஆய்வு

விபத்து ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்த சுற்றுலாத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா, நிருபர்களிடம் கூறியதாவது:சீலம்பூரில் கட்டடம் இடிந்து இரண்டு பேர் உயிரிழந்ததற்கு, 15 ஆண்டுகால ஊழல் மற்றும் ஓட்டு வங்கி அரசியல் தான் காரணம். இதுபோன்ற சம்பவங்கள் டில்லியின் சில பகுதிகளில் அடிக்கடி நடக்கின்றன. சமீபத்தில் முஸ்தபாபாத், சதர் பஜார் உள்ளிட்ட இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. சட்டவிரோத மற்றும் பாதுகாப்பற்ற கட்டுமானங்களை உடனடியாக கட்டுப்படுத்தா விட்டால் இதுபோன்ற விபத்துகள் தொடரும்.கடந்த, 15 ஆண்டுகளாக ஓட்டு வங்கி அரசியலால், ஊழல் அதிகரித்து இருந்தது. அங்கீகரிக்கப்படாத பல மாடி கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. ஆறு மாடி கட்டடங்கள் கூட எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளன.சீலம்பூரில் இடிந்து விழுந்த கட்டடத்தின் அருகேயுள்ள பல கட்டடங்களும் பாதுகாப்பு இல்லாமல்தான் இருக்கின்றன.சட்டவிரோத கட்டடங்களை அனுமதித்ததற்கு முந்தைய ஆம் ஆத்மி அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் இரங்கல்

முதல்வர் ரேகா குப்தா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சீலம்பூரில் கட்டடம் இடிந்து, விலைமதிப்பற்ற இரு உயிர்களை இழந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து கலெக்டரிட அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்,” என, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ