வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்போ ஒட்டு திருடியாக மாறியது
பாட்னா: உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பீஹாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட, 65 லட்சம் வாக்காளர்களின் விபரங்களை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் பீஹாரில், அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, மாநிலம் முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. அப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இருந்ததும், பீஹாரில் இருந்து நிரந்தரமாக குடியேறி வேறு மாநிலங்களில் வாக்காளராக பதிவு செய்தவர்களின் பெயர்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம், 65 லட்சம் போலி வாக்காளர்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடின. எனினும், பீஹாரில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அதே சமயம், ஆதார், ரேஷன் கார்டுகளை பரிசீலிக்கும்படி உத்தரவிட்டது. சிறப்பு தீவிர திருத்தப் பணியைத் தொடர்ந்து, கடந்த 1ல், பீஹாரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.90 கோடியில் இருந்து, 7.24 கோடியாக குறைந்தது. எனினும், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விபரங்கள் வெளியிடப் படவில்லை. இந்த வழக்கை, சமீபத்தில் மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்றம், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விபரங்களை, ஆக., 19க்குள் வெளியிடும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், பீஹாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத, 65 லட்சம் வாக்காளர்களின் விபரங்களை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. இந்த பட்டியல் தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக பாட்னாவில் 3.95 லட்சம்; குறைந்தபட்சமாக ஷேக்புரா மாவட்டத்தில் 26,256 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 'வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் தங்கள் ஆதார் அட்டையை சமர்ப்பித்து, செப்., 1 வரை விண்ணப்பிக்கலாம்' என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இப்போ ஒட்டு திருடியாக மாறியது