ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் 673 பேர் கைது; 138 பேர் மீது வழக்கு
புதுடில்லி:புத்தாண்டு நாளான நேற்று, அதிவேகமாக பைக் ஓட்டிய 35 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, டில்லி மாநகரம் நேற்று முன் தினம் இரவில் இருந்தே களைகட்டியது. பைக் மற்றும் கார் டிரைவர்களுக்கு போலீஸ் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், 'ஆபரேஷன் புல்லட் ராஜா' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது.தென்கிழக்கு டில்லி ஜாமியா நகரில் பைக்கில் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் மற்றும் புல்லட்டில் சாகசம் செய்த 35 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்களைப் பயன்படுத்தி, இடி சத்தத்தை ஏற்படுத்தியது, பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சாலையில் சாகசம் செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மது போதையில் வாகனம் ஓட்டி வந்த 673 பேர் கைது செய்யப்பட்டு, 131 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொது இடத்தில் மது குடித்த 93 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல்
இந்தியா கேட், கன்னாட் பிளேஸ் உட்பட மாநகர் முழுதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் பயணியர் காத்திருந்தனர். பங்களா சாஹிப் குருத்வாரா, கன்னாட் பிளேஸ் ஹனுமன் மந்திர், அக்ஷர்தாம், ஜாண்டேவாலன் மந்திர், கது ஷியாம் மந்திர் மற்றும் தெற்கு டில்லி ஜகன்னாதர் கோவில் ஆகிய இடங்களில் கூட்டம் அலைமோதியது. குதுப்மினாரை சுற்றிப் பார்க்க டிக்கெட் வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் வழிபாட்டு தலங்களில் கூட்டம் அலைமோதியது.அமிர்தசரஸ் பொற்கோவிலில், சீக்கியர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து, குருத்துவாராவுக்குள் சென்றனர்.