தெலுங்கானாவில் 7 நக்சலைட்டுகள் என்கவுன்டர்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஹைதராபாத்:தெலுங்கானாவில் போலீசார் நடத்திய என்கவுன்டரில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தளபதி உட்பட ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.தெலுங்கானாவில் முலுகு மாவட்டத்தின் சல்பாகா வனப்பகுதியில், நக்சல் நடமாட்டம் அதிகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அளித்த இரண்டு நபர்களை நக்சல் அமைப்பினர் சமீபத்தில் கொன்றனர்.இது, இப்பகுதியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர்.இந்நிலையில், நேற்று வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சல்கள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.இதையடுத்து, அவர்கள் மீது போலீசார் நடத்திய பதில் தாக்குதலில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர். இதில், நக்சல் இயக்கத்தின் முக்கிய கமாண்டரும், நக்சல் அமைப்பின் மாநில குழு உறுப்பினருமான பாத்ரு என்கிற குர்சம் மாங்கு என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் நிகழ்ந்த பகுதியில், நக்சல் அமைப்பினர் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கிகள் உட்பட ஏராளமான ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். முலுகு மாவட்டத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நிகழ்வது இதுவே முதல்முறை. இதன் வாயிலாக, நக்சல் அமைப்பின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.இதையடுத்து, இப்பகுதியில் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.