உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலி டாக்டர் செய்த அறுவை சிகிச்சை ம.பி.,யில் 7 நோயாளிகள் பரிதாப பலி

போலி டாக்டர் செய்த அறுவை சிகிச்சை ம.பி.,யில் 7 நோயாளிகள் பரிதாப பலி

தாமோ: மத்திய பிரதேசத்தில், தனியார் மருத்துவமனையில் போலி டாக்டர் ஒருவர் செய்த அறுவை சிகிச்சையால், ஏழு பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ம.பி.,யின் தாமோ மாவட்டத்தில் கிறிஸ்துவ மிஷினரிக்கு சொந்தமான மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணர் எனக்கூறி, என்.ஜான்கெம் என்பவர் டாக்டராக சில மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்தார்.

அறுவை சிகிச்சை

மருத்துவமனைக்கு வந்த இதய நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த அவர், சிலருக்கு அறுவை சிகிச்சையும் செய்தார். கடந்த ஒரு மாதத்தில் அவர் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் ஏழு பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.இது, பிற டாக்டர்கள் மற்றும் நோயாளிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பயம் காரணமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் சிலர், ஜபல்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மாறினர். இதற்கிடையே, ஏழு பேர் மரணம் தொடர்பாக புகார் எழுந்ததை அடுத்து, மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சோதனை நடத்தினர். இதில், பிரிட்டன் டாக்டர் ஜான்கெம் பெயரில் இருந்தது போலி டாக்டர் என்றும், அவர் பெயர் நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பதும் தெரியவந்தது.பிரிட்டன் டாக்டர் ஜான்கெம் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்கள் வாயிலாக அவர், அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மீது, தெலுங்கானாவின் ஹைதராபாதில், இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதாக ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தாமோ மாவட்டத்தின் குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவரும், வழக்கறிஞருமான தீபக் திவாரி கூறுகையில், “நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் செய்த அறுவை சிகிச்சையால் பலியானோர் எண்ணிக்கை ஏழு எனக் கூறப்படுகிறது.

விசாரணை

''ஆனால், உண்மையான எண்ணிக்கை அதுவாக இருக்காது. இந்த போலி டாக்டரின் சிகிச்சையால் மேலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும். எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்,” என்றார். அவர் பணியாற்றிய மருத்துவமனை, அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று வரும் நிலையில், அங்குள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ