டில்லியில் 800 விமானங்கள் தாமதம்: கருவிகளை புதுப்பிக்காததே காரணம்
புதுடில்லி: டில்லி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை கருவிகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நேற்று முன்தினம், 800 விமானங்கள் தாமதமான நிலையில், அந்த கருவிகளை புதுப்பிக்கக் கோரி, பார்லிமென்ட் நிலைக்குழு ஆகஸ்ட் மாதமே பரிந்துரைத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறை கருவிகளில், நேற்று முன்தினம் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ஏ.எம்.எஸ்.எஸ்., எனப்படும், விமான பயண திட்டங்களை தானியங்கியாக வழங்கும் கருவி மற்றும் அதை வைத்து ரேடார் உதவியுடன் விமான பாதையை கண்காணிக்கும் ஏ.டி.எஸ்., கருவி ஆகியவை பாதிக்கப்பட்டிருந்தன. விமான பயண திட்ட தகவல்களை அதிகாரிகள் தாங்களாகவே பெற்று அனுப்பி வைத்தனர். இதனால் காலதாமதம் ஏற்பட்டு டில்லியில் மட்டும், 800 விமானங்களின் புறப்பாடு வருகை நேற்று முன்தினம் தாமதமானது. மேலும் இதன் எதிரொலியாக மும்பை, ஜெய்ப்பூர், வாரணாசி உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய விமான நிலையங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை கருவிகளை விரைவில் புதுப்பிக்க வேண்டும் என விமான போக்குவரத்து துறைக்கான பார்லிமென்ட் குழு கடந்த ஆகஸ்ட் மாதமே பரிந்துரைத்தது தற்போது தெரிய வந்துள்ளது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தானியங்கி அமைப்புகளில் உள்ள தொழில்நுட்ப பிரச்னைகள் குறித்து அறிக்கை வெளியிட்டதும், அது பற்றி விவாதித்த பார்லி., நிலைக்குழு இந்த பரிந்துரைகளை வழங்கியிருந்தது. அதன் விபரம்: விமான போக்கு வரத்து கட்டுப்பாட்டு கருவிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சேர்த்து துல்லியம், வேகம் மற்றும் பாதுகாப்பை குறித்த காலத்திற்குள் மேம்படுத்த வேண்டும். புதிய அமைப்புகள் சர்வதேச தரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பயன்பாட்டில் உள்ள கருவிகள் குறித்து தொழில்நுட்ப தணிக்கை செய்ய வேண்டும். புதிய அமைப்புகளின் உருவாக்கம் மற்றும் நிறுவுதலில் துறைசார்ந்த நிபுணர்கள், விமான போக் குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தி, பயன்பாட்டுக்கு உகந்த, திறன்பெற்ற கருவிகளாக உள்ளதா என உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.