நாடு முழுதும் 85 சைபர் கிரைம் குருகிராமில் வாலிபர் பிடிபட்டார்
புதுடில்லி:நாடு முழுதும், 85 சைபர் கிரைம் வழக்குகளில் தொடர்புடைய வாலிபர், ஹரியானா மாநிலம் குருகிராமில் கைது செய்யப்பட்டார். குருகிராம் ஐ.டி., பார்க் ஒன்றில், மனிதவள ஆட்சேர்ப்பு நிறுவனம் நடத்தியவர் ஹில் சர்மா என்ற முனீர் கான், 33. ஆனால், எந்த நிறுவனத்துடனும் தொடர்பு இன்றி, போலியாக இந்த நிறுவனத்தை நடத்தி பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்தார். இதற்கிடையில், மே 22ம் தேதி திருடு போன 'ஐ-போன்' ஒன்றில் இருந்து, மே 26ம் தேதி 3.98 லட்சம் ரூபாய் பல்வேறு யு.பி.ஐ., எண்களுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, போன் உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து குருகிராம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். மோசடி செய்யப்பட்ட பணத்தில் இருந்து, 1 லட்சம் ரூபாய் தெலுங்கானாவில் உள்ள ஒரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டு அதில் இருந்து, 'மெராகி மேன்பவர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் உள்ள வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர். அந்த நிறுவனம் குறித்து விசாரித்த போது, பதிவு செய்திருந்த முகவரி போலி என்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து, அந்த நிறுவனம் குருகிராம், ஐ.டி., பார்க் ஒன்றில் இயங்குவதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டம் அசோட்டி கிராமத்தைச் சேர்ந்த சஹில் சர்மா என்ற முனீர் கான் கைது செய்யப்பட்டார். குருகிராமில் உள்ள அவர் நடத்திய அலுவலகத்தில் இருந்து, 200 காசோலைகள், நான்கு டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலியாக மனிதவள ஆட்சேர்ப்பு நிறுவனம் நடத்தி பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்திருப்பதும், நாடு முழுதும், 85 சைபர் குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிளஸ் 2 வரை படித்துள்ள முனீர் கான், உத்தம் நகரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு, நான்கரை ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். ஜாமினில் வந்தவுடன், போலி நிறுவனம் துவக்கி, பல வங்கிகளில் கணக்குளையும் துவக்கியுள்ளார், அந்த வங்கிக் கணக்கு வாயிலாக லட்சக்கனக்கில் பணம் மோசடி செய்துள்ளார். அவரது கூட்டாளிகள் சுபம், முகிம் மற்றும் முன்ஜிர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.