| ADDED : மார் 14, 2024 04:21 AM
கர்நாடகாவின், 28 லோக்சபா தொகுதிகளில், ஏழு தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஷிவமொகாவில் கீதா சிவராஜ்குமார் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகள். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மூத்த மருமகள். பிரபல நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி.இதற்கு முன்பு வேறு கட்சி சார்பில் போட்டியிட்டு தோற்றார். அதன்பின் காங்கிரசில் இணைந்தார். தற்போது காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.தனக்கு சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், முன்னதாகவே பிரசாரத்தையும் துவக்கியிருந்தார். இவருக்கு பக்கபலமாக அவரது கணவரும் நடிகருமான சிவராஜ்குமார், தன் மனைவியை எம்.பி.,யாக பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார்.இம்முறை தனக்கு வெற்றி கிடைக்குமென, கீதா சிவராஜ்குமார் நம்புகிறார். உற்சாகத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ஆரம்பத்திலேயே, தர்ம சங்கடத்துக்கு ஆளாகியுள்ளார். இவரிடம் ஷிவமொகா மக்கள், சமூக வலைதளம் மூலம் சரமாரியாக கேள்வி எழுப்பி, பதிலளிக்கும்படி வலியுறுத்தி உள்ளனர்.'ஷிவமொகாவுடனான தொடர்பான, நான் துண்டிக்கவில்லையென கூறியுள்ளீர்கள். ஆனால் இதற்கு முன்பு தேர்தலில் தோற்று, பெங்களூருக்கு சென்ற பின், எத்தனை முறை ஷிவமொகாவுக்கு வந்தீர்கள்?''காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நீங்கள், ஷிவமொகா மாவட்டத்துக்கு என்ன பங்களிப்பை அளித்தீர்கள்? ஷிவமொகாவின், எந்த கிராமத்துக்காவது சென்றுள்ளீர்களா? மக்களின் கஷ்டத்தை கேட்டறிந்தீர்களா?' என சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.இந்த கேள்விகள் மூலம், எப்போதாவது வந்து செல்லும் வேட்பாளருக்கு, தங்களின் ஓட்டு இல்லை என்பதை, ஷிவமொகா மக்கள் மறைமுகமாக உணர்த்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.