ரூ.150 கோடி விவகாரம் காரசார வாக்குவாதம்
பெலகாவி: வக்பு வாரிய ஆவண விவகாரத்தில், சிறுபான்மை ஆணைய முன்னாள் தலைவர் அன்வர் மனிப்பாடியுடன், 150 கோடி ரூபாய் டீல் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, சட்டசபையில் அமைச்சர்கள் பிரியங்க் கார்கே, கிருஷ்ணபைரேகவுடா மற்றும், பா.ஜ., விஜயேந்திரா இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.கர்நாடக சட்டசபையில் பா.ஜ., உறுப்பினர் விஜயேந்திரா நேற்று பேசியதாவது:சிறுபான்மை ஆணைய முன்னாள் தலைவர் அன்வர் மனிப்பாடிக்கும், எனக்கும் இடையில் 150 கோடி ரூபாய் டீல் நடந்ததாக, முதல்வர் சித்தராமையா, அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகின்றனர். வக்பு வாரியம் தொடர்பான அன்வர் மனிப்பாடி அறிக்கைகளை முந்தைய சித்தராமையா அரசு நிராகரித்தது. முதல்வருக்கு சி.பி.ஐ., மீது தற்போது நம்பிக்கை வந்து உள்ளது. தேவைப்பட்டால் 150 கோடி ரூபாய் டீல் குறித்தும் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடட்டும். முதல்வரை பார்த்தால் எனக்கு பரிதாபமாக உள்ளது. ஊழல் மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சுற்றுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது குறுக்கிட்ட அமைச்சர்கள் பிரியங்க் கார்கே, கிருஷ்ணபைரேகவுடா, 'இந்த அவையில் அரசியல் பற்றி பேசாதீர்கள். உங்களுக்கு அரசியல் பேசுவதை தவிர வேறு எதுவும் தெரியாதா' என்று கேட்டனர்.இதனால் அமைச்சர்களுடன், விஜயேந்திரா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக பா.ஜ., உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் கோஷம் எழுப்பியதால், அவையில் கூச்சல், குழப்பம் நீடித்தது. பின், ஆளும் தரப்பினரை சபாநாயகர் காதர் சமாதானப்படுத்தினார். பின், விஜயேந்திரா தொடர்ந்து பேசினார்.