| ADDED : பிப் 10, 2024 11:24 PM
ராய்ப்பூர், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு, ஆர்.பி.எப்., எனப்படும் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினர் சாரநாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று காலை வந்தனர். ராய்ப்பூர் ரயில் நிலையத்தில், 'எஸ் - 2' பெட்டியில் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட உடைமைகளை எடுத்துக்கொண்டு இறங்கினர்.அப்போது திடீரென தினேஷ் சந்திரா, 30, என்ற போலீஸ்காரர் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில், அதில் இருந்து வெளியேறிய குண்டு, அவரது மார்பில் பாய்ந்தது. மேல் படுக்கையில் படுத்திருந்த முகமது தனிஷ் என்ற பயணியின் அடிவயிற்றிலும் ஒரு குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த இருவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு சிகிச்சை பலனின்றி போலீஸ்காரர் தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். துப்பாக்கி வெடித்தது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.