21ல் டில்லி முதல்வராக பதவியேற்கிறார் ஆதிஷி
புதுடில்லி :டில்லியில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய ஆதிஷி, பதவியேற்க தேதியை குறிப்பிடாததால், நாளை மறுதினம் பதவியேற்க, துணைநிலை கவர்னர் சக்சேனா பரிந்துரைத்துள்ளார். டில்லி முதல்வராக இருந்த ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான சி.பி.ஐ., வழக்கில், கடந்த 15ல், உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, சிறையில் இருந்து வெளியே வந்தார். எனினும், முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகளால் அவர் அதிருப்தி அடைந்தார். சமீபத்தில் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், 'இரு நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன். என்னை நேர்மையானவன் எனக் கருதி, மக்கள் மீண்டும் வெற்றி பெறச் செய்தால் மட்டுமே முதல்வர் ஆவேன்' என, சபதமிட்டார். இதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், டில்லியில் நேற்று முன்தினம் காலை நடந்தது. இதில், புதிய முதல்வராக, அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற ஆதிஷி தேர்வு செய்யப்பட்டார்.தொடர்ந்து, மாலையில் டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனாவை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், ராஜினாமா கடிதத்தை அளித்தார். அப்போது அவருடன் சென்ற ஆதிஷி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதத்தை, துணைநிலை கவர்னர் சக்சேனாவிடம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்த கடிதத்தில் பதவியேற்பதற்கான தேதி, அமைச்சரவை குறித்தும் அவர் குறிப்பிடவில்லை. தேதியை துணைநிலை கவர்னரே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் ஆதிஷி தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போது ஆதிஷி மட்டுமே முதல்வராக பதவியேற்க உள்ளார் என்பது தெரிய வருகிறது. சில நாட்களுக்குப் பின், அமைச்சரவை பதவியேற்கும் என, கூறப்படுகிறது. இந்நிலையில், நாளை மறுநாள் முதல்வராக ஆதிஷி பதவியேற்க, துணைநிலை கவர்னர் சக்சேனா பரிந்துரை செய்துள்ளார். இதுகுறித்து அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.