UPDATED : நவ 26, 2025 06:54 PM | ADDED : நவ 26, 2025 06:52 PM
புதுடில்லி: 2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடத்துவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன.உலகளவில், விளையாட்டு போட்டிகளின் திருவிழாவாக ஒலிம்பிக் கருதப்படுகிறது. இதற்கு அடுத்த விழாவாக, அதிக எண்ணிக்கையில் நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டியாக கருதப்படுவது காமன்வெல்த் போட்டி ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த போட்டிகள், அடுத்து 2026ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆக., 2 வரை நடக்கிறது. காமன்வெல்த் அமைப்பில் உள்ள 74 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.இதனைத் தொடர்ந்து 2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா திட்டமிட்டது. இதற்கான போட்டியில் தீவிரமாக இறங்கியது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்து இருந்தது. குஜராத்தின் ஆமதாபாத் நகரில் இப்போட்டிகளை நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. காமன்வெல்த் விளையாட்டு குழுவினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆமதாபாத் வந்துஆய்வு செய்திருந்தனர்.இந்நிலையில், 2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 2030ம் ஆண்டு ஆமதாபாத்தில் நடக்க உள்ளது. இந்த முடிவு இந்தியாவின் விளையாட்டுத்துறையில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ஆமதாபாத்தில் உலகத் தரம் வாய்ந்த மைதானங்கள், அதிநவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி மையங்கள் அமைந்துள்ளன.