நடு வானில் தொழில்நுட்ப கோளாறு மும்பை திரும்பிய ஏர் இந்தியா விமானம்
மும்பை: மும்பையில் இருந்து அமெரிக்காவின் நேவார்க் நோக்கி புறப்பட்ட 'ஏர் இந்தியா' விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக சந்தேகம் எழுந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் மும்பைக்கு திரும்பியது. மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து நேற்று அதிகாலை அமெரிக்காவின் நேவார்க் நகருக்கு, ஏர் இந்தியாவின் 'ஏ.ஐ., 191' என்ற விமானம் புறப்பட்டது. நடு வானில் பறந்த போது விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டிருப்பதாக விமானிக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், விமானம் அவசரமாக மீண்டும் மும்பைக்கு திரும்பியது. இது குறித்து, ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கை: விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. அதன் பின், விமானத்தின் தகுதி மற்றும் பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்த தேவையான ஆய்வுகள் நடந்தன. பாதிக்கப்பட்ட பயணியருக்கு ஹோட்டல் வசதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாற்று ஏர் இந்தியா அல்லது பிற விமான சேவைகளில் பயண ஏற்பாடு செய்யப்படும். இது ஒரு 'ரவுண்ட் டிரிப்' விமானம் நேவார்க்கை அடைந்த உடன், அங்கிருந்து மும்பை வர வேண்டிய பயணியரை ஏற்றி வரும். தற்போது அந்த பயணமும் ரத்தாகியுள்ளது. அவர்களுக்கும் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ள ன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.