விபத்தில் சிக்காமல் சாதுர்யமாக தப்பிய ஏர் இந்தியா விமானம்
புதுடில்லி : ஆமதாபாத் விமான விபத்து அரங்கேறிய, 38 மணி நேரத்திற்குள், மற்றொரு 'ஏர் இந்தியா' விமானமும், நடுவானில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, 900 அடி உயரத்தில் இருந்து கீழே இறங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து கடந்த மாதம் 12ம் தேதி புறப்பட்ட 'ஏர் இந்தியா' விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில், 270 பேர் உயிரிழந்தனர்.இந்த கோர சம்பவம் அரங்கேறிய இரண்டு நாட்களில், மற்றொரு, 'ஏர் இந்தியா' விமானமும் இதுபோன்ற விபத்தை சந்திக்க நேர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் 14ம் தேதி, டில்லியில் இருந்து ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் வியன்னா நகருக்கு, 'ஏர் இந்தியா'வின் 'ஏஐ - 187' என்ற 'போயிங் 777' விமானம், 200க்கும் மேற்பட்ட பயணியருடன் புறப்பட்டது. மோசமான வானிலை காரணமாக, இந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 900 அடி உயரத்தில் இருந்து கீழே இறங்கியதாகவும், எனினும், விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்ததுடன், 9 மணி நேரம் 8 நிமிடங்கள் பயணித்து வியன்னாவில் பத்திரமாக தரையிறக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், பயணியர் அனைவரும் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம், விசாரணையை துவக்கி உள்ளது.