| ADDED : அக் 19, 2024 12:04 AM
பெங்களூரு: பெங்களூரில் விமான நிலையத்துக்கு விரைந்து செல்ல ஏதுவாக 'ஏர் டாக்சி' சேவை துவங்க உள்ளது.கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரின் தீராத தலைவலி போக்குவரத்து நெரிசல். நெரிசலில் சிக்கி, பலரும் விமானத்தை தவறவிட்ட உதாரணங்கள் உள்ளன. இதை கருத்தில் கொண்டு, கெம்பே கவுடா சர்வதேச விமான நிலைய அதிகாரிகள், 'ஏர் டாக்சி' சேவையை துவங்க, 'சர்ளா ஏவியேஷன்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.சர்ளா ஏவியேஷன் சி.இ.ஓ., ஆட்ரியன் ஸ்மித் கூறியதாவது:தற்போது பெங்களூரு இந்திரா நகரில் இருந்து விமான நிலையத்துக்கு செல்ல, ஒரு மணி 50 நிமிடங்களாகின்றன. இதற்கு தீர்வு காணும் நோக்கில், விமான நிலைய நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, பறக்கும் டாக்சி போக்குவரத்து துவங்கப்படும்.பறக்கும் டாக்சியால், எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் இடையிலான பயண நேரம், 152 நிமிடங்களில் இருந்து, வெறும் 19 நிமிடங்களாக குறையும். ஏர் டாக்சி, ஏழு இருக்கை திறன் கொண்டதாகும். இது விமான பயணத்தில், புதிய புரட்சியை ஏற்படுத்தும்.எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து, விமான நிலையத்துக்கு பிரீமியம் டாக்சியில் சென்றால் 2500 ரூபாய் கட்டணம் ஆகும். இவ்வளவு ரூபாய் செலவிட்டாலும் விமான நிலையத்தை அடைய இரண்டரை மணி நேரமாகும்.ஆனால் பறக்கும் டாக்சி கட்டணம், 1700 ரூபாய் மட்டுமே. போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படாமல், விரைந்து விமான நிலையத்தை அடையலாம். நேரம், பணம் மிச்சமாகும். விரைவில் ஏர் டாக்சி போக்குவரத்து துவங்கும்.இவ்வாறு கூறினார்.