உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடும் உழைப்பால் கிடைத்த பதவி: கர்நாடக முதல்வர் உருக்கம்

கடும் உழைப்பால் கிடைத்த பதவி: கர்நாடக முதல்வர் உருக்கம்

பெங்களூரு:''நாற்பது ஆண்டுகள் கடும் உழைப்பால், கர்நாடக முதல்வர் பதவியை அடைய முடிந்தது,'' என்று முதல்வர் எடியூரப்பா கூறினார்.முதல்வர் எடியூரப்பா தன் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பதற்கு முன், கர்நாடக பலிஜா சமிதியினர் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டார்.பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் 3 'ஏ' பிரிவிலிருந்த பலிஜா சமுகத்தினரை, 2 'ஏ' பிரிவுக்கு மாற்றி முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டிருந்தார். இதன் மூலம் கல்வி மற்றும் அரசு நிர்வாகங்களில் வேலை வாய்ப்பு ஒதுக்கீடு அளிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.இதற்காக பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவுக்கு வந்த முதல்வர் எடியூரப்பாவுக்கு, அச்சமூகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.விழா மேடையில், பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதி எம்.பி.,யும், இச்சமூக தலைவருமான மோகன், மைசூரு தலைப்பாகை அணிவித்தார்.முதல்வர் எடியூரப்பா கூட்டத்தில் பேசியதாவது:கர்நாடக முதல்வர் பதவியில் நான் அமர்வேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. கடினமான உழைப்பு காரணமாகவே முன்னுக்கு வந்தேன். கடந்த மூன்றாண்டுகளில், கர்நாடக மக்களுக்காக செய்த சாதனைகள் எனக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. நாற்பது ஆண்டுகளாக அரசியலில் இருந்த என்னை, முதல்வராக்கியதற்காக மக்களுக்கு நன்றி. முதல்வர் பதவி மிகவும் பொறுப்பானவருக்கு மட்டுமல்ல, மக்களுக்கு சேவை செய்வதற்கு வாய்ப்பளிக்கும் பதவியாகும். கடந்த 38 மாதங்களாக இரவு, பகலாக மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளேன். பின்தங்கிய வகுப்பினருக்காகவும், ஏழைகளுக்காகவும் தேவையான உதவிகளை செய்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.ஜனநாயகத்தில் மக்கள்தான் உண்மையான எஜமானர்கள். கடந்த ஐந்து நாட்களாக நான் மிகவும் தனிமையில் இருந்தேன். அதிகாரம் என்பது யாருக்குமே நிரந்தரமானதல்ல. கர்நாடகாவில் முறைகேடான சுரங்கங்களுக்கு முதலில் தடை விதித்ததே நான் தான். எனது பதவிக் காலத்தில் தான், முறைகேடான சுரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சுப்ரீம் கோர்ட்டிற்கு பரிந்துரை செய்தேன். இந்த மாநிலத்தின் இயற்கை செல்வங்களை பிறர் கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டேன். எனக்கு பணம் முக்கியமல்ல.கர்நாடக அரசின் நடவடிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டே பாராட்டியது. இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டது குறித்தும், மக்கள் என் மீது அன்பு காட்டியது குறித்தும் மிகவும் பெருமைப்படுகிறேன். கர்நாடக மக்கள் என்றும் என்னை மறக்கமாட்டார்கள் என கருதுகிறேன். அரசின் நிதி நிலைமை திருப்திகரமாக உள்ளது.கட்சியின் கட்டளைப்படி, நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். இன்று (நேற்று) ஆஷாடா (ஆடி) மாதம் முடிந்து, ஸ்ராவண மாதம் துவங்குவதால் நல்ல நாளாக கருதி, ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன்.தொடர்ந்து, கர்நாடக மக்களை சந்திப்பேன். அவர்களின் உரிமைகளுக்காக பாடுபடுவேன். கர்நாடகத்தில் அடுத்த பதினைந்து ஆண்டுகளும் பா.ஜ., ஆட்சி தொடர்ந்து நடக்கவும், பா.ஜ.,வின் வெற்றிக்காகவும் கடுமையாக உழைப்பேன்.கடந்த ஐந்து நாட்களுக்கு பின், இப்போது தான் மக்களை சந்தித்து பேசுகிறேன். பலிஜா சமூகத்தினரிடம் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சி என்பதால், அவர்களை ஏமாற்ற நான் விரும்பவில்லை. இதுவரை எனக்கு ஆதரவு அளித்த கர்நாடக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவுக்கு அரசு காரில் வந்து இறங்கிய நான், விழா முடிந்ததும் எனது வாகனத்தில் செல்வேன். 2013ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், பா.ஜ., 150 இடங்களை பிடிக்கும் வகையில், கட்சிக்காக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யவுள்ளேன்.பலிஜா சமூகத்தினருக்காக, பி.சி.மோகன் எம்.பி., மிகவும் கடுமையாக உழைத்துள்ளார். அவரது தொண்டு மிகவும் பாராட்டிற்குரியது.இவ்வாறு எடியூரப்பா பேசினார்.அவர் பேசும் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். சில சந்தர்ப்பங்களில் கண்ணீரை அவரால் அடக்க முடியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ