உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத வன்முறை தடுப்புச் சட்ட மசோதா அபாயகரமானது சொல்கிறார் அசோக் சிங்கால்

மத வன்முறை தடுப்புச் சட்ட மசோதா அபாயகரமானது சொல்கிறார் அசோக் சிங்கால்

மும்பை:''மத்திய அரசு கொண்டு வர உள்ள மத வன்முறை தடுப்புச் சட்ட மசோதா அபாயகரமானது மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமானது,'' என, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் கூறியுள்ளார்.காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு, 'மத வன்முறைகள் மற்றும் குறிப்பிட்ட பிரிவினரை குறிவைத்து தாக்கும் வன்முறைகள் தடுப்புச் சட்ட வரைவு மசோதாவை' தயாரித்துள்ளது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள இந்த வரைவு மசோதாவுக்கு, பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கும் முயற்சிகளில் ஒன்று தான், இந்த புதிய சட்ட மசோதா. மக்களிடையே சரிந்துள்ள காங்., அரசின் செல்வாக்கை சரி செய்யவும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே, புதிய சட்டத்தை இயற்றி, சிறுபான்மையோரை திருப்திபடுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அதன் உறுப்பினர்கள் பெரும்பாலோர் இந்து மதத்திற்கு எதிரானவர்கள். மத வன்முறை தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், சோனியாவின் அரசியல் எதிரிகள் பலர் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்படுவது நிச்சயம்.இனக் கலவரங்கள் ஏற்படும்போது, இந்துக்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை பாய்ச்சவே இந்த ஏற்பாடு. இதனால், குற்றங்களில் ஈடுபடும் சிறுபான்மையோர், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க நேரிடும். இந்து, முஸ்லிம் இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக்கக் கூடும். இந்த சட்ட மசோதாவின் விளைவுகளை அறிந்தவர்கள் நிச்சயமாக, நாடு தழுவிய போராட்டங்களை நடத்துவர். அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். தேவைப்பட்டால், அரசியல் கட்சிகளின் ஆதரவும் கேட்கப்படும்.புதிய சட்ட மசோதா குறித்து, விஸ்வ இந்து பரிஷத் சார்பில், நாடு தழுவிய விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். பார்லிமென்ட் கூட்டத் தொடரில், எம்.பி.,க்களை நேரில் சந்தித்து, மத வன்முறை தடுப்புச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என, கேட்டுக் கொள்வோம்.லோக்பால்: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்றி, இந்தியா கொண்டு வர வேண்டும் என்பதே நாட்டு மக்களின் ஒட்டுமொத்த விருப்பம். அதேபோல், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வலுவான விசாரணைக் குழு ஏற்படுத்தப்படுவது அவசியம்.சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் லோக்பால் மசோதா எதிர்ப்புப் போராட்டத்திற்கு, பெரும்பான்மையான மக்களின் ஆதரவு தேவை. இதில், நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் ஆதரவை வழங்க வேண்டும்.இவ்வாறு அசோக் சிங்கால் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ