உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனநாயகத்தை காப்பாற்ற போராட்டம் தொடரும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேச பேச்சு

ஜனநாயகத்தை காப்பாற்ற போராட்டம் தொடரும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேச பேச்சு

புதுடில்லி:“ஜனநாயகத்தையும் அரசியலமைப்பு சாசனத்தையும் காப்பாற்றும் போராட்டம் தொடரும்,” என, ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால் பேசினார்.ஆம் ஆத்மி கட்சியின் 12ம் ஆண்டு துவக்க நாள் விழா, கட்சி தலைமையகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:நேர்மை மற்றும் மக்களின் அன்பு காரணமாக ஆம் ஆத்மி கட்சி வலுவாக உருவெடுத்துள்ளது. அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்கான போராட்டம் தொடரும். ஆம் ஆத்மி கட்சியின் துவக்க நாளும், அரசியலமைப்பு சாசன தினமும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.அரசியலமைப்பு சாசன தினத்தில் ஆம் ஆத்மி கட்சி துவக்கப்பட்டது தற்செயலாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. இது, கடவுளின் செயல். டில்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மியின் ஆட்சி மற்றா மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.நேர்மையில் வேரூன்றியுள்ள ஆம் ஆத்மி, சாமானியர்களுக்கான கட்சி. ஆம் ஆத்மி கட்சியின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால், நேர்மையான ஆட்சி மட்டும்தான். தலைநகர் டில்லியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் அதே வேளையில் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இலவசமாகவே வழங்கி வருகிறோம்.சில கட்சிகளின் தலைவர்கள் விளம்பரத்துக்காக குடிசைப் பகுதிக்கு வருகின்றனர். அவர்களே பின்னாளில், குடிசைகளை அப்புறப்படுத்த புல்டோசர்களை அனுப்புகின்றனர். இதுபோன்ற போலி அரசியல் தலைவர்களிடம் டில்லி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்காக தலைவர்களும் தொண்டர்களும் முழுமூச்சுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்கும் டில்லி சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது முறையாகவும் வெற்றி பெற்று மக்கள் பணியைத் தொடர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ஆம் ஆத்மியின் மூத்த தலைவரு, டில்லி முதல்வருமான ஆதிஷி சிங் பேசும்போது, “வளர்ச்சிப் பணிகள் மற்றும் நேர்மையான நிர்வாகம் ஆகியவற்றால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை 2020ல் நடந்த தேர்தலில் நிரூபித்தோம். அரசுப் பள்ளிகளை சர்வதேச தரத்துக்கு கல்வியிலும் உள்கட்டமைப்பிலும் உயர்த்தினோம். இதுதான் டில்லி மாடல்,”என்றார்.முன்னதாக, சமூக வலைத்தளத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவில், “12 ஆண்டுகளுக்கு முன், ஆம் ஆத்மி கட்சி நிறுவப்பட்டதில் இருந்து பல போராட்டங்கள், தியாகங்களை செய்துதான் இன்று தேசியக் கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியை ஒழித்துக் கட்ட லட்சக்கணக்கான முயற்சிகள் செய்தனர். ஆனால், நேர்மைதான் எங்களைக் காப்பாற்றியது. அந்த நேர்மைக்காகத்தான் மக்கள் எங்கள் மீது அளவுகடந்த அன்பு செலுத்துகின்றனர். அநீதி மற்றும் சர்வாதிகாரத்துக்கு எதிராக முன்பை விட இப்போது வலுவாக நிற்கிறோம்,”என, கூறியுள்ளார்.கடந்த 2020ம் ஆண்டு நடந்த டில்லி சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி