உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிக்கிம், அருணாச்சல், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிப்பு

சிக்கிம், அருணாச்சல், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : லோக்சபா தேர்தலுடன், நான்கு மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு நடக்கும் சட்டசபை தேர்தல், தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களில், லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளது.தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் ஒரு கட்டமாகவும், ஒடிசாவில் இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடக்க உள்ளது. ஆந்திராவில், மே 13, அருணாச்சலில், ஏப்., 19, ஒடிசாவில், மே 13 மற்றும் மே 20, சிக்கிமில், ஏப்., 19ல் தேர்தல் நடக்க உள்ளது.லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகும், ஜூன், 4ம் தேதி இந்த நான்கு மாநில சட்டசபைகளின் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.

ஆந்திரா

இங்கு தற்போது, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த, 2019 தேர்தலில், மொத்தமுள்ள, 175 தொகுதிகளில், ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி, 151 இடங்களில் வென்றது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், 23 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.தற்போது, தெலுங்கு தேசம் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகியவை கூட்டு சேர்ந்ததுடன், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளன. ஜெகன்மோகன் ரெட்டி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளார். வரும் தேர்தலில் கடுமை போட்டி இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அருணாச்சல பிரதேசம்

வடகிழக்கு மாநிலமான அருணாச்சலில், தற்போது முதல்வர் பெமா காண்டு தலைமையிலான பா.ஜ., ஆட்சி உள்ளது. மொத்தம், 60 தொகுதிகள் உள்ள இங்கு, பா.ஜ., மற்றும் காங்., நேரடியாக மோத உள்ளன.

ஒடிசா

முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆட்சி அமைந்துள்ள இங்கு, 147 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில், பிஜு ஜனதா தளம் -- 112, பா.ஜ., -- 23, காங்கிரஸ் - 9 தொகுதிகளில் வென்றன.இங்கு, மே, 13 மற்றும் 20ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. பிஜு ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்னும் அது முடிவாகவில்லை.

சிக்கிம்

மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், 32 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில், 17 இடங்களில் வென்ற சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சியை அமைத்தது. சிக்கிம் ஜனநாயக முன்னணி, 15ல் வென்றது. இந்த முறை, முதல்வர் பிரேம் சிங் தமாங்கின் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கடும் சவாலை எதிர்நோக்கி உள்ளது.

26 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

லோக்சபா மற்றும் நான்கு மாநில சட்டசபை தேர்தல்களுடன், நாடு முழுதும் காலியாக உள்ள, 26 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி தமிழகத்தின் விளவங்கோடு தொகுதிக்கு, ஏப்., 19ல் தேர்தல் நடக்க உள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் ராஜ்யசபா தேர்தலின்போது போர்க்கொடி துாக்கி, எதிர்க்கட்சியான பா.ஜ., நிறுத்திய வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டளித்த, ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் நீக்கப்பட்டனர். இதையடுத்து, ஹிமாச்சல பிரதேசத்தில் காலியாக அறிவிக்கப்பட்ட இந்த தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.அதுபோல், குஜராத்தில் 5, உத்தர பிரதேசத்தில் 4, மேற்கு வங்கத்தில், 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.பீஹார், ஹரியானா, ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, திரிபுரா, தெலுங்கானா, ராஜஸ்தான், கர்நாடகாவில் தலா ஒரு சட்டசபை தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்க உள்ளது.ஹரியானாவில், சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து பா.ஜ.,வின் மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்தார். அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். அவருடைய, கர்னால் சட்ட சபை தொகுதிக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் நவாப் சிங் சைனி போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை