உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தரமற்ற 3 இருமல் மருந்துகளை தவிர்க்கவும்; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

தரமற்ற 3 இருமல் மருந்துகளை தவிர்க்கவும்; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

புதுடில்லி : இந்தியாவில் தயாரிக்கப்படும், 'கோல்ட்ரிப்' உள்ளிட்ட மூன்று வாய்வழி இருமல் மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ள நிலையில், தங்கள் நாடுகளில் இந்த மருந்துகள் புழக்கத்தில் இருந்தால் அதை பயன்படுத்த வேண்டாம் என, உலக சுகாதார நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது. தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட, 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை குடித்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த 5 வயதுக்கு உட்பட்ட 22 குழந்தைகள், சமீபத்தில் கிட்னி பாதிப்பால் இறந்தனர். இது தவிர ராஜஸ்தானிலும் இருமல் மருந்து குடித்த நான்கு குழந்தைகள் இறந்தனர். குழந்தைகள் உயிரிழப்புக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, 'கோல்ட்ரிப், ரெஸ்பி பிரஷ் டிஆர்' மற்றும் 'ரீ லைப்' ஆகிய மூன்று வாய்வழி இருமல் மருந்துகளே காரணம் எனவும், தரமற்ற இந்த மருந்துகளை குடித்ததால் குழந்தைகள் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம், உலகில் உள்ள தேசிய ஒழுங்குமுறை அமைப்பு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற இருமல் மருந்துகளான, 'கோல்ட்ரிப், ரெஸ்பி பிரஷ் டிஆர்' மற்றும் 'ரீ லைப்' ஆகியவை உங்கள் நாடுகளில் இருந்தால் அதுகுறித்து சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். தரமற்ற இந்த தயாரிப்புகள் முறைசாரா மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத சந்தைகளில் இருக்கிறதா என்பதை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். இந்த மூன்று வாய்வழி இருமல் மருந்துகளிலும், 'டை எத்திலீன் கிளைக்கால்' என்ற தரமற்ற பொருள் இருப்பதை இந்தியாவில் உள்ள மத்திய தரக்கட்டுபாட்டு அமைப்பு கடந்த 8ல் உறுதி செய்துள்ளது. இதையடுத்து அதன் உற்பத்தி முடக்கப்பட்டுள்ளதுடன், மருந்துக்கான அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த மருந்துகள் இந்தியாவில் இருந்து இப்போது ஏற்றுமதி செய்யப்படவில்லை என்பதுடன், சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வது குறித்த தகவல் எதுவும் இல்லை. இதையும் மீறி, இந்த மருந்துகள் உங்களிடம் இருந்தால் அதை பயன்படுத்த வேண்டாம். ஒருவேளை பயன்படுத்தியிருந்தால் அந்த குழந்தைகளை விஷமுறிவு டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ