வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெற்றெடுக்கும் தாயையும், தோளிலும் சுமந்து வளர்க்கும் தந்தையையும், வயதான காலத்தில் தங்களுக்கு பாரமாக உள்ளனர் என்று நினைத்து, சில பிள்ளைகள் முதியோர் இல்லத்தில் சேர்க்கின்றனர்.இத்தகையவர்களுக்கு பெற்றோரின் வலி, வேதனைகள் புரிவது இல்லை. இந்நிலையில், பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டாம் என, பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துமகூருவை சேர்ந்த 24 வயது இளம்பெண் 4,850 கிலோ மீட்டர், பைக் பயணம் சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். அதுபற்றிய விபரம்: தொண்டு நிறுவனம்
ராம்நகர் கிருஷ்ணாபுரா தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா ராவ், 24. எம்.பி.ஏ., பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நடன, இசை கலைஞராகவும் உள்ளார். யு - தர்மா என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி, அதன் மூலம் சுற்றுச்சூழல், முதியோர் பராமரிப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.வயதான காலத்தில் பெற்றோரை, முதியோர் இல்லத்தில் பிள்ளைகள் விடக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக, தமிழகத்தின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4,850 கி.மீ., பைக் பயணம் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.'பெற்றோரை அனாதைகள் ஆக்கி, முதியோர் இல்லத்திற்கு அனுப்பாதீர்கள். அவர்களின் கடைசி நாட்களை, மகிழ்ச்சியாக முடித்து கொள்ள உதவுவோம்' என்ற வாசகம் அடங்கிய பதாகையை, பைக்கின் முன் வைத்துக் கொண்டு பயணம் செய்தார். அம்மாவின் ஆதரவு
இதுகுறித்து சித்ரா ராவ் கூறியதாவது:நீண்ட துாரம் பைக் பயணம் செய்வது, எனக்கு புதிது இல்லை. பெற்றோரை, முதியோர் இல்லத்திற்கு அனுப்ப நினைக்கும், பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, பைக்கில் சென்றது திருப்தி அளிக்கிறது.இந்த பயணத்தை நான் மட்டும் தனியாக மேற்கொண்டேன். எனது விழிப்புணர்வு பயணம் குறித்து, குடும்பத்தினரிடம் கூறியபோது, இவ்வளவு துாரம் தனியாக வேண்டாம் என்றனர். ஆனால் எனது அம்மா எனக்கு ஆதரவாக இருந்தார்.கன்னியாகுமரி - காஷ்மீர் இடையே 4,850 கி.மீ., துாரத்தை கடக்க 141 நாட்கள் எடுத்துக் கொண்டேன். காலை 6:00 முதல் காலை 10:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரையும், தினமும் பைக் ஓட்டினேன். பாதுகாப்புக்காக பெப்பர் ஸ்பிரே, இரண்டு சிறிய கத்திகள் வைத்திருந்தேன். வரவேற்பு
தினமும் எனது அம்மாவுக்கு, நான் எங்கு இருக்கிறேன் என்று, லொகேஷன் அனுப்பினேன். அடிக்கடி என்னை தொடர்பு கொண்டு, ஊக்கப்படுத்துவார். இந்த பயணத்தின்போது பள்ளி, கல்லுாரிகள் மாணவ - மாணவியர், அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அனைத்து மாநிலங்களிலும் எனக்கு வரவேற்பு கொடுத்தனர்.தமிழகத்தில் இருந்து புறப்பட்டு கர்நாடகா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் வழியாக, காஷ்மீர் சென்றேன். ஜம்மு கத்ராவில் உள்ள ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி, பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், எனக்கு அனுமதி கிடைக்கவில்லை.காஷ்மீர் சென்றதும், எனது மொபைல் போன் சிம் செயலிழந்தது. இதனால் அங்கு ஒருவரிடம் மொபைல் வாங்கி, அம்மாவை தொடர்பு கொண்டு பேசினேன். இந்த பயணம் வெற்றிகரமாக முடிந்தது. பெற்றோரை, பிள்ளைகள் முதியோர் இல்லத்திற்கு அனுப்ப கூடாது என்பதே, எனது குறிக்கோள். இதற்காக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.இவ்வாறு அவர் கூறினார்- நமது நிருபர் -.