உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபாவில் நிறைவேறியது வங்கி சட்ட திருத்த மசோதா

லோக்சபாவில் நிறைவேறியது வங்கி சட்ட திருத்த மசோதா

புதுடில்லி, ''வங்கி சட்டங்கள் திருத்த மசோதா வாயிலாக முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள், இத்துறையின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன், வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தும்,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.லோக்சபாவில், வங்கி சட்டங்கள் திருத்த மசோதாவை நேற்று தாக்கல் செய்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:ரிசர்வ் வங்கி சட்டம், 1934, வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சட்டம், 1955, வங்கி நிறுவனங்கள் (பங்கீடுகளை கையகப்படுத்துதல் மற்றும் மாற்றுதல்) சட்டம், 1970 மற்றும் 1980ல், 19 திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.வங்கிக் கணக்கு வைத்துள்ளோர், நான்கு பேர் வரை நாமினிகளாக அறிவிக்க இந்த மசோதா இடமளிக்கிறது.ஐ.இ.பி.எப்., எனப்படும், முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்திற்கு உரிமை கோரப்படாத ஈவுத்தொகைகள், பங்குகள் மற்றும் வட்டி அல்லது பத்திரங்களை மீட்டெடுப்பதற்கும் இந்த மசோதா வழிசெய்கிறது.தனிநபர்கள் நிதியிலிருந்து பரிமாற்றங்கள் அல்லது பணத்தைத் திரும்பப் பெறலாம், இதனால் முதலீட்டாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். இந்த மசோதா வாயிலாக முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் வங்கி நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன், வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தி, உரிய பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.பொதுத்துறை வங்கிகளை இணைப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ''பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. எனவே, அவற்றை இணைக்கும் திட்டம் இல்லை,'' என்றார்.இந்த மசோதா தொடர்பாக பா.ஜ., - எம்.பி., சம்பித் பத்ரா பேசுகையில், 1974ல் முன்னாள் பிரதமர் இந்திராவின் செயல்பாடுகள் பற்றி கருத்து தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ், தி.மு.க., உட்பட 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தி.மு.க., - எம்.பி., ராஜா, “மசோதாவில் இந்திராவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா? சபையில் இல்லாத நபர் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு வைப்பது ஏன்?” என்றார். இதையடுத்து பேசிய லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, ''மசோதா விவகாரத்திலிருந்து விவாதம் திசை மாறிச் செல்கிறது, '' என கூறி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதையடுத்து இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை