உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பொறுமையாக இருங்கள்; உங்களை அழைக்கிறேன்: ராகுலின் உறுதியால் சிவகுமார் உற்சாகம்

 பொறுமையாக இருங்கள்; உங்களை அழைக்கிறேன்: ராகுலின் உறுதியால் சிவகுமார் உற்சாகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'முதல்வர் பதவி விவகாரத்தில் பொறுமையாக இருங்கள்; உங்களை அழைக்கிறேன்' என, கர்நாடக துணை முதல்வர் சிவகுமாருக்கு, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல், 'மெசேஜ்' அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. மாநில காங்., தலைவர் சிவகுமார், துணை முதல்வராக இருக்கிறார். ஆட்சி பொறுப்பை ஏற்றபோது, இரண்டரை ஆண்டுக்கு பின், சிவகுமாருக்கு முதல்வர் பதவியை விட்டு தருவதாக சித்தராமையா வாக்குறுதி அளித்திருப்பதாக கூறப்பட்டது. ஆதரவு கொடுங்கள் இதன்படி, காங்கிரஸ் அரசு அமைந்து, கடந்த 20ம் தேதியுடன் இரண்டரை ஆண்டு முடிந்தது. முதல்வர் பதவிக்குகாய் நகர்த்திய சிவகுமார், 20ம் தேதி இரவு, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சிலரை, மேலிட தலைவர்களை சந்திக்க டில்லிக்கு அனுப்பி வைத்தார். உஷாரான சித்தராமையா, பெங்களூரு வந்த கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார். சித்தராமையா, சிவ குமார் இருவருமே முதல்வர் பதவிக்கு முரண்டு பிடிப்பதால், பிரச்னையை ராகுலிடம் தள்ளிவிட கார்கே முடிவு செய்தார். ராகுலுடன் மொபைல் போனில், 20 நிமிடங்கள் கார்கே பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, 'பொறுமையாக இருங்கள்; உங்களை அழைக்கிறேன்' என்று ராகுலிடம் இருந்து சிவகுமாருக்கு மொபைல் போனில், 'மெசேஜ்' வந்ததாக தகவல் வெளியானது. இதனால், நான்கு நாட்களாக முகம் வாடிய நிலையில் காணப்பட்ட சிவகுமார், நேற்று மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். இந்நிலையில், சித்தராமையாவின் ஆதரவாளரான பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியை, நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் ஒரு ஹோட்டலில் சிவகுமார் சந்தித்து பேசினார். அப்போது, 'நான் முதல்வராக ஆதரவு கொடுங்கள்; மாநில காங்., தலைவர் பதவியை உங்களுக்கு வாங்கி கொடுக்கிறேன். தேவைப்பட்டால், உங்களை துணை முதல்வராகவும் நியமிக்கிறேன்' என, சிவகுமார், 'டீலிங்' பேசியதாகவும் கூறப்படுகிறது. வழிகாட்டுதல் தேவை சந்திப்பு குறித்து, சதீஷ் ஜார்கிஹோளி நேற்று அளித்த பேட்டி: சிவகுமாருக்கு முதல்வராக வேண்டும் என்ற லட்சியம் முன்பே உள்ளது. அரசு அமைந்த முதல் நாளில் இருந்தே, தன் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார். தலைமை மாற்றம் குறித்து தற்போதைக்கு எந்த விவாதமும் இல்லை. தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், சித்தராமையாவின் தலைமை, வழிகாட்டுதல் எங்களுக்கு தேவை. இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டில்லியில் நேற்று கூறுகையில், ''கர்நாடகாவில் முதல்வர் பதவிக்காக ஏற்பட்டுள்ள குழப்பம் பற்றி நான், சோனியா, ராகுல் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசி பிரச்னையை தீர்ப்போம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajasekar Jayaraman
நவ 27, 2025 05:11

போங்கடா நீங்களும் உங்க ஆட்சியும்.


Thravisham
நவ 27, 2025 05:01

டி கே ஸ் பழைய ரவுடி ஷீட்டர். அவருடைய தம்பியும் அப்படியே. அடுத்த ஆட்சி பாஜக.


Kasimani Baskaran
நவ 27, 2025 03:47

அப்படியென்றால் சித்தராமையாவுக்கு இனி துணை மூத்தவர் பதவி கூட கிடைக்காது போல தெரிகிறது..


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை