ஜன., 20 முதல் பீர் விலை ரூ.10 - 50 வரை உயர்கிறது! குடிமகன்கள் பாக்கெட்டில் கை வைக்கும் அரசு
கர்நாடகாவில் நடக்கும் காங்கிரஸ் ஆட்சியில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு சர்வ சாதாரணமாகி விட்டது. சமீபத்தில், அரசு பஸ் டிக்கெட் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்தியது. இதனால், சாமானிய மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருந்த நிலையில், 'குடி'மகன்கள் பாக்கெட்டையும் அரசு விட்டு வைக்கவில்லை. வரும் 20ம் தேதி முதல், பீர் விலை 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகரிக்கும் என, கலால் துறை அறிவித்துள்ளது. இதனால், 'குடி'மகன்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.கர்நாடகாவில் மதுபானங்கள் மீதான கலால் வரியை, அரசு எப்போதும் பட்ஜெட்டில் உயர்த்துவது வழக்கம். கலால் வரியை உயர்த்துவதன் மூலம் மதுபான விலை அதிகமாகும்.மது பிரியர்களின் கோபத்திற்கு ஆளாக கூடாது என்பதால், அரசு, ஒவ்வொரு முறையும் மதுபான விலை உயர்த்தப்படுகிறது உள்ளது என்பதை நேரடியாக கூறாமல், சாமர்த்தியமாக கலால் வரி அதிகரிக்கப்படுகிறது என கூறும். இது தெரியாமல், மது பிரியர்கள், மது கடைக்கு சென்று தங்களுக்கு பிடித்த மதுவை வாங்கும் போது, விலை உயர்ந்துள்ளதை அறிந்து புலம்புவர். அதிர்ச்சி
எது எப்படியோ... ஆண்டுக்கு ஒருமுறை பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்படும். ஆனால், இந்த ஆண்டு, பட்ஜெட்டிற்கு முன்பே மதுபான விலையை உயர்த்த உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது. முதல் கட்டமாக பீர் விலை மட்டுமே உயர உள்ளது. கடந்த ஆகஸ்டிலேயே பீர் விலையை உயர்த்துவதாக மாநில அரசு அறிவித்தது. இதை கேட்ட மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 'விலையை உயர்த்தக் கூடாது' என, குடித்து விட்டு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால், பீர் விலையை உயர்த்துவது தள்ளி போடப்பட்டது.ஆயினும், வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்ற பணமின்றி அரசு தள்ளாடுவதால், வரும் 20ம் தேதி முதல் பீர் விலை உயரும் என கலால் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், பிராண்ட் அடிப்படையில் பீர் விலை 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, அரிசி, பருப்பு, பஸ் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில், அந்த லிஸ்டில் மதுபானமும் சேர்ந்து உள்ளது.இதன்படி, 5 சதவீதம் ஆல்கஹால் கொண்ட பீர் விலை 12 ரூபாயும்; 5 முதல் 8 சதவீதம் கொண்ட பீர் விலை 20 முதல் 50 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமானம்
சில ஆண்டுகளுக்கு முன், கர்நாடகாவில் மது விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில், இந்திய மதுபான விலைகள் 25 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. இதன் காரணமாக பீர் விலை குறைந்தது. இதனால், மது பிரியர்கள் பீரை குடித்து, அரசுக்கு நல்ல வருமானத்தை ஈட்டி தந்தனர்.குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில், பீர் விற்பனை உச்சத்தை தொட்டது. இதன் மூலம் நல்ல வருவாய் கிடைத்தது. ஆனால் தற்போது விலை அதிகரிக்க உள்ளதால், பீர் விற்பனை குறையுமா என்ற கேள்வி எழுகிறது. மதுபான உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'பீர் விலை உயர்த்தப்பட்டால், இந்தியாவிலேயே அதிக விலைக்கு பீர் விற்கப்படும் மாநிலமாக கர்நாடகா திகழும். விலை உயர்வால், பீர் விற்பனை குறையும்' என தெரிவித்து உள்ளது.வாக்குறுதி திட்டங்களை அறிவித்து விட்டு, நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறும் காங்கிரஸ் அரசு, சாமானிய மக்களின் தலையில் வரி, விலை உயர்வு போன்றவற்றை சுமத்துகிறது. இப்போது, 'குடி'மகன்களின் பாக்கெட்டிலும் கை வைக்க துவங்கி உள்ளது.விலை பட்டியல் (ரூபாயில்) (தோராயமாக)பிராண்ட்...பழைய விலை ...புதிய விலை லெஜண்ட்...100...145பவர் கூல்...130...155பிளாக் போர்ட்...145...160ஹன்டர்...180...190உட்பகர் கிளைட்...230...240- நமது நிருபர் -