விருது மழை! : 3 பேருக்கு பாரத ரத்னா
புதுடில்லி : முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. ஒரே ஆண்டில் ஐந்து பேருக்கு நாட்டின் மிக உயர்ந்த விருதுவழங்கப்படுவது இதுவே முதல் முறை.அவரவர் துறையில் சாதனை படைத்து நாட்டின் அடையாளமாக திகழ்ந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குர் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் தான் இவ்விருது அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், நரசிம்ம ராவ், சரண் சிங், சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.அவர் கூறியதாவது:நாட்டின் வளர்ச்சிக்காக ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. எம்.எல்.ஏ.,வாக, உத்தர பிரதேச முதல்வராக, மத்திய உள்துறை அமைச்சராக பணியாற்றிய போது நாட்டின் வளர்ச்சியை கட்டியெழுப்பும் பணியை அவர் விரைவுபடுத்தினார். குறிப்பாக, 1975ல் இந்திரா அறிவித்த அவசரநிலையின் போது, விவசாயிகளுக்காகவும், ஜனநாயகத்தை கட்டிக்காக்கவும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு, இந்த தேசத்துக்கு புதிய உத்வேகத்தை அளித்தது.பி.வி.நரசிம்ம ராவ் சிறந்த அறிஞராக, அரசியல்வாதியாக பல்வேறு பதவிகளில் நாட்டிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினார். அவரது தொலைநோக்கு பார்வை, நம் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்றியதுடன், செழிப்பான வளர்ச்சிக்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.அவர் பிரதமராக பதவி வகித்த காலத்தில் தான், சர்வதேச சந்தைக்கு இந்தியாவின் கதவுகளை திறந்து விட்டு, பொருளாதார வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை துவக்கி வைத்தார். வெளியுறவுக் கொள்கை, மொழி மற்றும் கல்வித்துறைகளில் அவரது பங்களிப்பு நரசிம்ம ராவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தின.வேளாண் துறையில் நம் நாடு மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்ட காலத்தில், உணவு பாதுகாப்பில் நாம் தன்னிறைவு பெற எம்.எஸ்.சுவாமிநாதன் சிறப்பான பங்களிப்பை அளித்தார். அவரது கடுமையான முயற்சிகள் நம் விவசாயத்துறையை நவீனமயமாக்கியது.ஒரு கண்டுபிடிப்பாளராகவும், வழிகாட்டியாகவும், பல மாணவர்களிடையே கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பவராகவும் அவரது விலைமதிப்பற்ற பணியை இந்த அரசு அங்கீகரிக்கிறது. சுவாமிநாதனின் தொலைநோக்குப் பார்வை, நம் நாட்டின் விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. இவ்வறு பிரதமர் கூறினார்.சோனியா உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களும், விருது அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.பொருளாதார சீர்திருத்தங்களுக்கு சொந்தக்காரர்
விடுதலைக்காக சிறை சென்றவர்
'பசுமை புரட்சி' நாயகர்
இந்தாண்டு தான் அதிகம்
பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றியவர்களுக்கு, நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. ஜனாதிபதியிடம் பிரதமரின் நேரடி பரிந்துரையின்படி இந்த விருது அளிக்கப்படுகிறது. கடந்த 1954ல் பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷண் என்ற இரண்டு உயரிய விருதுகளை மத்திய அரசு நிறுவியது. ஒரு சில ஆண்டுகள் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வந்தாலும், சில ஆண்டுகளில் யாருடைய பெயரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படாமலும் இருந்துள்ளன.கடைசியாக, 2019ல் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது. பூபேந்திர குமார் ஹஸாரிகா மற்றும் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கு, மறைவுக்கு பிறகான பாரத ரத்னா அதே ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பின் ஐந்து பேருக்கு பாரத ரத்னா விருது இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.பீஹார் முன்னாள் முதல்வரும், சமூக சீர்திருத்தவாதியுமான கர்ப்பூரி தாக்குர் மற்றும் பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு இந்த விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்தில் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் விவசாயத்தில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி, நாட்டின் உணவு உற்பத்தியை உயர்த்தியவரான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு, மறைவுக்கு பிறகான பாரத ரத்னா விருது நேற்று அறிவிக்கப்பட்டது.இதற்கு முன் அதிகபட்சமாக 1999ல், ஜெயப்பிரகாஷ் நாராயண், பேராசிரியர் அமர்த்யா சென், லோக்பிரிய கோபிநாத் போர்டோலாய், பண்டிட் ரவிசங்கர் என நான்கு பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. அதன் பின், இந்த ஆண்டு ஐந்து பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது நிறுவப்பட்டதில் இருந்து இதுவரை, 53 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளன.நால்வர் அரசியல்வாதிகள்
நடப்பாண்டு பாரத ரத்னா விருது பெறும் ஐந்து பேரில், நால்வர் அரசியல்வாதிகள்; ஒருவர் விஞ்ஞானி. எந்த கட்சி மத்தியில் ஆட்சி செய்கிறதோ, அதை சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு விருது வழங்குவது வாடிக்கை. பிரதமர் மோடி அதை மாற்றி, அவரது கட்சியை சாராத மூன்று தலைவர்களுக்கு விருது அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் இது பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்க்கட்சிகள் கவலை அடைந்துள்ளன.