தொழில் துவங்குவோருக்கு புதிய சலுகைகளை அறிவித்த பீஹார் முதல்வர் நிதிஷ் குமார்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பீஹாரில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், முதலீட்டாளர்களுக்கு சிறப்பு பொருளாதார தொகுப்புகளை அறிவித்து, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலை மனதில் வைத்து, பல கவர்ச்சி கரமான அறிவிப்புகளை முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், முதல்வர் நிதிஷ் குமார் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். மேலும், புதிதாக தொழில் துவங்குபவர்களை ஊக்குவிக்கவும் முடிவு செய்துள்ளோம். அதன்படி, பீஹாரில் தொழில்களை துவங்கவும், தனியார் துறைகளை ஊக்குவிக்கவும் சிறப்பு பொருளாதார தொகுப்பு வழங்கப்படும். இதன் கீழ், மூலதன மானியம், வட்டி மானியம், ஜி.எஸ்.டி., ஆகியவற்றிற்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை இரட்டிப்பாக்கப்படும். அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இலவசமாக நிலம் வழங்கப்படும். தொழில் துவங்க ஒதுக்கப்பட்ட நிலம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும். பீஹாரில் தொழில்களை மேம்படுத்துவது; இளைஞர்கள் திறமையானவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் மாற்றுவது; அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.