பீஹாரில் வீட்டின் கூரை இடிந்து விழுந்தது; ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாப பலி
பாட்னா: பீஹாரில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பீஹாரின் பாட்னா மாவட்டத்தின் டானாபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்தது. கூரை திடீரென இடிந்து விழுந்து, குடும்பத்தினர் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். சத்தம் கேட்டதும் உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த துயர சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.இறந்தவர்கள் பப்லு கான், அவரது மனைவி ரோஷன் கட்டூன், அவர்களது மகன் முகமது சந்த், மகள் ருக்ஷார் மற்றும் அவர்களது இளைய மகள் சாந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.