பா.ஜ., -- எம்.எல்.ஏ.,வுக்கு 2 ஆண்டு
தர்பங்கா: பீஹாரில், உள்ளூர்வாசியை அடித்து பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில், பாஜ., -- எம்.எல்.ஏ.,வுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.பீஹாரின் அலிநகர் தொகுதி பா.ஜ., -- எம்.எல்.ஏ., மிஸ்ரி லால் யாதவ். 2019ல், அவர் தன்னை அடித்து கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்ததாக உமேஷ் மிஸ்ரா என்பவர் புகார் அளித்திருந்தார். எம்.எல்.ஏ., உடன் அவரது உதவியாளர் சுரேஷ் யாதவ் என்பவரும் தாக்கியதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதுதொடர்பான வழக்கை, தர்பங்காவில் உள்ள எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்ற மாஜிஸ்திரேட் விசாரித்தார்.கடந்த பிப்ரவரி மாதம், மிஸ்ரி லால் யாதவுக்கு மூன்று மாத சிறைத்தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்தார்.இதை எதிர்த்து யாதவ் அதே நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் உறுதி செய்தது. அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், கூடுதலாக 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைத்தவுடன், எம்.எல்.ஏ., மிஸ்ரி லால் யாதவ் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என, பீஹார் சட்டசபை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.